ஓட்டல் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை-நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
வேன் டிரைவரை கத்தியால் குத்திக்கொன்ற ஓட்டல் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
வேன் டிரைவரை கத்தியால் குத்திக்கொன்ற ஓட்டல் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
டிரைவர் கொலை
நெல்லை ராமையன்பட்டி சிவாஜி நகரை சேர்ந்தவர் தாஸ் (வயது 36). இவர் பாளையங்கோட்டை ரெயில்வே பீடர் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேன் டிரைவராக வேலை செய்து வந்தார். அதே ஓட்டலில் தச்சநல்லூர் மங்களா குடியிருப்பை சேர்ந்த திருமுருகன் (42) புரோட்டா போடும் தொழிலாளியாக வேலை செய்தார்.
இவர்கள் இருவருக்கும் இடையே வேலை தொடர்பாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி இரவு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த திருமுருகன் கத்தியால் தாசை சரமாரியாக குத்திக் கொலை செய்தார்.
ஆயுள் தண்டனை
இதுதொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமுருகனை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை 2-வது மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் (வன்கொடுமை தடுப்பு) நடந்து வந்தது.
நீதிபதி பத்மநாபன் வழக்கை விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட திருமுருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கந்தசாமி ஆஜரானார்.