கட்டிய வீட்டை இடிக்கச்சொல்லி வற்புறுத்தும் அதிகாரிகள்


கட்டிய வீட்டை இடிக்கச்சொல்லி வற்புறுத்தும் அதிகாரிகள்
x
திருப்பூர்


கொடுவாய் அருகே இலவச வீட்டுமனைப்பட்டா பெற்ற இடத்தில் கட்டிய வீடுகளை அதிகாரிகள் இடிக்கச்சொல்லி வற்புறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் மனு கொடுத்து முறையிட்டனர்.

இலவச வீட்டுமனைப்பட்டா

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கொடுவாய் அருகே நிழலி பகுதியை சேர்ந்தவர்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடந்த 2000-ம் ஆண்டு 440 பேருக்கு தலா 3 சென்ட் வீதம் அரசு சார்பில் பட்டா வழங்கப்பட்டது. அந்த நிலத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் குடிசைகள், சிமெண்ட் சீட்டுகள் கொண்டு வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். அதன்பிறகு அதே இடத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு 400 பேருக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.

வீட்டை இடிக்க வற்புறுத்தல்

இதனால் ஏற்கனவே அங்கு குடியிருந்தவர்கள் மற்றும் பட்டா பெற்றவர்களுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் நிழலி பகுதியில் அரசு சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதுஒருபுறம் இருக்க, ஏற்கனவே கடந்த 2000-ம் ஆணடு பட்டா பெற்று வீடு கட்டியவர்களிடம், காங்கயம் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து வீடுகை அகற்ற உத்தரவிட்டுள்ளனர். அதன்பிறகு மொத்த நிலத்தையும் அளவீடு செய்து மீண்டும் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

நாங்கள் ஏற்கனவே கட்டிய வீட்டை இடித்து விட்டால் அதற்கு செலவுத்தொகையை யார் கொடுப்பார்கள்?. அதிகாரிகள் தொடர்ந்து குழப்பி வருகிறார்கள். வீட்டுக்கு மின்சாரம், குடிநீர் இணைப்பு இல்லாமல் இதுவரை வீடு கட்டி குடியிருந்தவர்களின் வீடுகளை இடிக்கச்சொல்லி அதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story