வெங்காய வியாபாரி வீட்டின் பூட்டைஉடைத்து நகை-பணம் திருட்டு
வெங்காய வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை
அனுப்பர்பாளையம்,
திருப்பூரில் வெங்காய வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வெங்காய வியாபாரி
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன். இவர் திருப்பூர் பொம்மநாயக்கன்பாளையம் பாலாஜிநகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருப்பூரில் வெங்காய வியாபாரம் செய்து வருகிறார். இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான விருதுநகருக்கு சென்றிருந்தார்.
பின்னர் நேற்று காலை திருப்பூர் திரும்பினார். அப்போது அவருடைய வீட்டின் முன்பக்க கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தார்.
நகை-பணம் திருட்டு
அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 2 பவுன் நகை, ரொக்கம் ரூ.1 லட்சம் மற்றும் வெள்ளிப் பொருட்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து உடனடியாக அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் கொடுத்தார்.
போலீசார் விசாரணை
அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்ருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ள காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெங்காய வியாபாரி வெளியூர் சென்றதை அறிந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்தள்ளது. திருப்பூரில் வெங்காய வியாபாரி வீட்டில் நகை-பணம் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
--------------------