உடுமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 17 ½ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்

பூட்டை உடைத்து 17 ½ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்
போடிப்பட்டி,
உடுமலையில் வீட்டின் பூட்டை உடைத்து 17 ½ பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். தொடர் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மருத்துவ சிகிச்சை
உடுமலை அய்யலு மீனாட்சி நகர் வேலுசாமி நகர் விரிவு பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேலு (வயது 64). பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
இவர்களது மூத்த மகன் திருமணமாகி குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். இளைய மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் கோவை சூலூரிலுள்ள காப்பகம் ஒன்றில் தங்கி மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்.
17½ பவுன் நகை திருட்டு
இந்தநிலையில் மகனைப் பார்ப்பதற்காக தங்கவேலுவும் அவருடைய மனைவியும் வீட்டைப் பூட்டி விட்டு சூலூர் சென்றனர். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்கக் கதவின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது வீட்டின் படுக்கை அறையிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 17½ பவுன் தங்க நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
அவற்றின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும். மேலும் அருகிலுள்ள 2 வீடுகளிலும் திருட முயற்சி நடைபெற்றுள்ளது. இதுகுறித்து தங்கவேலு உடுமலை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுமக்கள் அச்சம்
உடுமலை பகுதியில் ஆளில்லாத வீடுகளைக் குறி வைத்து மர்ம நபர்கள் பணம், நகைகளைத் திருடிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சின்மயாநாடார் நகர் பகுதியில் ஓய்வு பெற்ற தனியார் கல்லூரி துணை பேராசிரியர் வீட்டில் பூட்டை உடைத்து 19 பவுன் நகைகள் திருடப்பட்டுள்ளது.
அதற்கு ஒருசில நாட்கள் இடைவெளியில் மாரியப்ப லேஅவுட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 7½ பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரம் திருடப்பட்டது.
இதேபோல கடந்த மாதம் காந்திநகர் வெங்கடாச்சலம் வீதியில் மாடியில் ஆள் இருக்கும் போதே வீடு புகுந்து 1¾ பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். உடுமலை பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டு சம்பவம் பொதுமக்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.






