வாடகை வீட்டு மாடியில் இயங்கி வரும் வகுப்பறை
ஓசூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதால் வாடகை வீட்டு மாடியில் வகுப்பறை இயங்கி வருகிறது. இதனால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ஓசூர்
ஓசூர் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதால் வாடகை வீட்டு மாடியில் வகுப்பறை இயங்கி வருகிறது. இதனால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தொடக்கப்பள்ளி
ஓசூர் அருகே உள்ள பாலிகானப்பள்ளி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி ெசயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த அரசு பள்ளி கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் அடைந்து இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட பள்ளிக்கல்வித்துறை மூலம் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது. இங்கு படித்து வரும் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள 2 வீடுகள் வாடகைக்கு எடுக்கப்பட்டு அங்கு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. 3 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அங்கிருந்து சிறிது தூரம் உள்ள மற்றொரு வீட்டில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்கள் அவதி
மேலும் 3 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தினமும் ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு படித்து வரும் மொட்டை மாடி வகுப்பறைக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டு வருகின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்திற்கு தற்போது வரை புதிய பள்ளி கட்டிடம் கட்டாததால் அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே, உடனடியாக பாலிகானப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.