வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுவதற்கு கண்டனம்
உடுமலை அருகே கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ராயல்லட்சுமி நகருக்கு செல்லும் வழியில் சாரதாமணி லே-அவுட் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த பகுதியில் தனிநபர் காலனியில் உள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடுகிறது. அந்த காலனியை சுற்றியும் பல வீடுகள் உள்ளன. கழிவுநீர் அந்த காலனியின் முன்பு தேங்கி நிற்பதாலும், அங்கிருந்து வெளியேறி சாலையில் செல்வதாலும் கொசு உற்பத்தியாகி நோய் பரவக்கூடிய நிலை உருவாகும் என்பதால், கழிவுநீர் வெளிப்பகுதிக்கு வராதபடி செய்யவேண்டும் என்று அந்த காலனியை சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருக்கும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் அந்த சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கழிவுநீர் கால்வாய் அமைத்துத்தரவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அந்த காலனியில் உள்ள வீடுகளில் இருந்து மீண்டும் கழிவுநீர் வெளியேறி சாலையில் ஓடியதால் அருகில் உள்ள மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அங்கு திரண்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் தரப்பில் அந்த பகுதி பொது மக்களிடம் பேசப்பட்டது. அப்போது இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறியதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.