வீட்டுமனை அங்கீகார சான்று வழங்க கோரிக்கை


வீட்டுமனை அங்கீகார சான்று வழங்க கோரிக்கை
x
திருப்பூர்


காங்கயம் அருகே வீட்டுமனை அங்கீகார சான்று வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள்மனு கொடுத்தனர்.

மின்மாற்றி

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் மூலம் கொடுத்து முறையிட்டனர்.

ஈரோடு ரகுபதி நாயக்கன்பாளையத்தை சேர்ந்த ஜெயராம் என்பவர் அளித்த மனுவில், 'நான் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவன்.

எனது மனைவி பெயரில் காங்கயம் சிவன்மலை ஒட்டபாளையம் கிராமத்தில் 1.36 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.

இந்த நிலத்துக்கு அருகே தனியார் ஒருவர் நூற்பாலை வைத்துள்ளார். ஆனால் இந்த நூற்பாலைக்கு மின்கம்பங்கள் அமைத்து, மின்மாற்றியை எனது நிலத்தில் அமைத்துள்ளனர்.

இதற்காக என்னிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. இதுகுறித்து கேட்டபோது மின்மாற்றியை அகற்றப்படும் என்றனர். ஆனால் இதுவரை அகற்றாமல் உள்ளது. உடனடியாக அகற்ற வேண்டும்' என்று கூறியுள்ளார்.

வீட்டுமனை

காங்கயம் கணபதிபாளையம் ஒட்டபாளையத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், 'நாங்கள் ரோஸ் கார்டனில் வீட்டுமனை வாங்கி வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். டி பிளாக் பிரிவில் 92 மனையிடங்கள் உள்ளன.

இதில் 5 பேர் வீடு கட்டியுள்ளோம். ஒருவர் மனை அங்கீகாரம் சான்று பெற்றுள்ளார். ஆனால் மற்ற குடியிருப்புகளுக்கு மனை அங்கீகார சான்று விண்ணப்பித்தும் வழங்கப்படாமல் உள்ளது.

ஏற்கனவே சான்று பெற்றவரின் சான்றையும் கொடுத்து கேட்டாலும் காங்கயம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தர மறுக்கிறார். இதனால் குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு உள்ளிட்டவற்றை பெற முடியாமல் தவிக்கிறோம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியுள்ளனர். வெள்ளகோவில் உப்புப்பாளையம் பகுதியை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், 'எங்களுக்கு சொந்த வீடோ, நிலமோ இல்லை. அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்கி உதவ வேண்டும்' என்று கூறியுள்ளனர்.


Next Story