இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கி உதவ வேண்டும்
அணைப்புதூரில் நீர் நிலை புறம்போக்கில் குடியிருப்பவர்களின் வீடுகளின் மின் இணைப்பை துண்டிப்பதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள 37 குடும்பத்தினர் தங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து முறையிட்டனர்.
அணைப்புதூர்
திருப்பூர் திருமுருகன்பூண்டி அணைப்புதூர் ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்த மக்கள் 40-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருப்பூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் நீண்டகாலமாக வீடு கட்டி வசித்து வந்தோம். 137 வீடுகள் கட்டி வசித்து வந்த நிலையில் நீர்நிலை புறம்போக்கில் உள்ள வீடுகளை காலி செய்யுமாறு எங்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வருவாய்த்துறை அதிகாரிகள் மூலமாக நோட்டீஸ் வழங்கப்பட்டது. அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு செய்வதற்கு பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக ஒவ்வொருவருக்கும் முதல்கட்டமாக தலா ரூ.40 ஆயிரம் கேட்டனர்.
பணம் இருந்தவர்கள் கட்டி முடித்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற்றனர். சிலர் வீட்டை காலி செய்து விட்டு வாடகை வீடுகளுக்கு சென்று விட்டனர். நாங்கள் 37 குடும்பத்தினர் மிகவும் வறுமையில் வசித்து வருகிறோம். அதனால் அங்கேயே குடியிருந்து வருகிறோம். விதவைகள், ஆதரவற்றவர்களாக கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறோம். ஏற்கனவே கடன் பெற்று வீடுகளை செப்பனிட்டு வசித்து வந்த எங்களால் மேலும் கடன் பெற முடியவில்லை. நாங்கள் பணம் செலுத்தாததால் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு கிடைக்கவில்லை.
இலவச வீட்டுமனைப்பட்டா
இந்தநிலையில் எங்கள் வீடுகளின் மின் இணைப்பை துண்டிப்பு செய்ய அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள். எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கினால் அங்கு சென்று குடியிருப்போம். இதற்கு ஏற்பாடு செய்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர்.