சூறாவளி காற்றுடன் பெய்த மழை; 20 வீடுகள் சேதம்
பல்லடம் அருகே சுக்கம்பாளையத்தில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் பெய்த மழையால் 20 வீடுகள் சேதம் அடைந்தது.
20 வீடுகள் சேதம்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சுக்கம்பாளையம் பகுதியில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. இங்கு நேற்று திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் அந்த பகுதியில் இருந்த 20 வீடுகளின் சுவர்கள், மேற்கூரைகள், சுற்றுச்சுவர்கள் இடிந்து சேதமடைந்தது.
இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் இந்த காலனி அருகே தனியாருக்கு சொந்தமான வீட்டுமனைகள் உள்ளது. இந்த வீட்டுமனைகளை சுற்றி கட்டப்பட்டிருந்த சுமார் 200 மீட்டர் நீளமுள்ள ஹாலோ பிளாக் கற்களால் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் நேற்று பெய்த மழையால் இடிந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
உரிய நிவாரணம்
மழையால் சேதம் அடைந்த வீடுகளை பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு உணவு மற்றும் தங்கும் இடத்திற்கான ஏற்பாடுகளை செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் சேதத்தின் அடிப்படையில் உரிய நிவாரணம் கிடைக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசிடமிருந்து பெற்று தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.