ஈரோடு காமராஜர் பள்ளிக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் - பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு
ஈரோடு காமராஜர் பள்ளிக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.
ஈரோடு காமராஜர் பள்ளிக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.
தார்சாலை வசதி
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பெருந்துறை தாலுகாவுக்கு உள்பட்ட எல்லீஸ்பேட்டை அண்ணாநகர் 3-வது வார்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'எங்கள் பகுதியில் சுமார் 45 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்கு தார்சாலை வசதி இல்லை. இதனால் அவசர தேவைக்கு கூட எங்கள் பகுதிக்கு ஆம்புலன்ஸ் மற்றும் இதர வாகனங்கள் வர முடியவில்லை. எனவே எங்கள் பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும்' என்று கூறி இருந்தனர். பெருந்துறை அருகே உள்ள குளத்தான்வலசு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், "எங்கள் பகுதியில் 120 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். ஆனால் எங்கள் பகுதியில் பொது கழிப்பிட வசதி இல்லை. இதனால் பெண்கள், கர்ப்பிணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள். எனவே எங்கள் பகுதியில் பொதுகழிப்பிட வசதி ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்" என்றனர்.
வக்கீல் திடீர் தர்ணா
சமூக ஆர்வலரும், வக்கீலுமான பி.டி.லோகநாதன், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று திடீரென உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். உடனே அங்கிருந்த அதிகாரிகள் விரைந்து சென்று அவரிடம் உங்களுடைய கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனால் அவர், தர்ணா போராட்டத்தை முடித்துகொண்டு கலெக்டரிடம் தான் கொண்டு வந்திருந்த கோரிக்கை மனுவை கொடுத்தார். அந்த மனுவில், 'ஈரோடு கருங்கல்பாளையம் காமராஜர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சில வகுப்பறைகள், கூட்ட அரங்கம் போன்றவற்றை பல ஆண்டாக மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரம் மற்றும் தேர்தல் தொடர்பான கருவிகள், ஆவணங்களை வைத்து சீல் வைத்து, போலீஸ் பாதுகாப்பு போட்டுள்ளனர்.
போதுமான வகுப்பறை இன்றி மாணவர்கள், தரையில் அமர்ந்தும், மரத்தடியில் அமர்ந்தும் படிக்கின்றனர். இதனால் மாணவர்கள் படிப்பதற்கு இடையூறாக உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை வேறுஇடத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி இருந்தார்.
285 மனுக்கள்
அ.தி.மு.க. ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், "ஈரோடு மாநகர் ஆர்.கே.வி. ரோட்டில் விரிவாக்க பணிகள் 2 மாதமாக நடந்து வருகிறது. மேலும் சாலையோரங்களில் 4 இடங்களில் கழிவு நீர் பாலங்கள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர் எனவே சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். மொத்தம் 285 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து ெபறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதை அதிகாரிகளிடம் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷனி சந்திரா, தனித்துனை கலெக்டர் சமூக பாதுகாப்புதிட்டம் குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரங்கநாதன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அதிகாரி கோதைசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.