நரிக்குறவர் குடும்பங்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும்
அய்யம்பேட்டை அருகே பசுபதி கோவிலில் வசிக்கும் நரிக்குறவர்கள் தங்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அய்யம்பேட்டை:
அய்யம்பேட்டை அருகே பசுபதி கோவிலில் வசிக்கும் நரிக்குறவர்கள் தங்களுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோரிக்கை
அய்யம்பேட்டை அருகே பசுபதிகோவிலில் 46 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் 16 குடும்பங்களுக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள குடும்பத்தினருக்கு பட்டாவும், இங்கு வசிக்கும் அனைவருக்கும் அரசு வீடும் கட்டித்தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்கள் கூறியதாவது:-
நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக இந்த பகுதியில் வசித்து வருகின்றோம். இங்கு 46 குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். நாங்கள் பிளாஸ்டிக் கொட்டகை அடித்தும், கூரை வீடுகளிலும் குழந்தைகளுடன் தங்கியுள்ளோம். மழை, புயல் உள்ளிட்ட காலங்களில் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றோம்.
வீடு கட்டித்தர வேண்டும்
எங்களில் 16 பேருக்கு மட்டுமே வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு பட்டாவும், சொந்த வீடும் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல இப்பகுதியில் சாலை வசதியும், மின் விளக்கு வசதியும் செய்து தர வேண்டும். மேலும் நாங்கள் ஏற்கனவே பாசிமணி, ஊசி விற்று தான் பிழைப்பு நடத்தி வருகின்றோம். இந்தநிலையில் எங்களுக்கு அரசின் நலவாரிய அட்டை கொடுத்துள்ளனர். அந்த அடையாள அட்டையை கொண்டு எங்கள் தொழிலை மேம்படுத்துவதற்காக வங்கிகள் மானியத்துடன் கூடிய கடன் உதவி வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.