மழை பெய்தாலே ஒழுகும் வீடுகள்


மழை பெய்தாலே ஒழுகும் வீடுகள்
x

சின்னசேலத்தில் மழை பெய்தாலே இலங்கை தமிழர்களின் வீடுகள் ஒழுகுகிறது. அச்சத்துடன் வாழும் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கும் வகையில் வீடுகளை சீரமைக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்:

தாய் நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சமடைந்தவர்களை அகதிகள் என்று சொல்வார்கள். நம்மிடையே அகதிகள் என்றால், நம் தொப்புள்கொடி உறுவுகளாக கருதும் இலங்கை தமிழர்களின் நினைவுகள் தான் நம் கண்முன் வந்து நிற்கும்.

இலங்கையில் பல்வேறு காலக்கட்டங்களில் நடந்த உள்நாட்டு போர் காரணமாக, பல்லாயிரக்கணக்கில் இலங்கை தமிழர்கள் தமிழகம் நோக்கி வந்தனர். இவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

அந்த வகையில், தமிழகத்தில் 29 மாவட்டங்களில் 108 முகாம்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கி உள்ளனர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தெற்கு கிராம எல்லையில் ராயர்பாளையம் சாலை அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு 77 குடும்பத்தை சேர்ந்த 246 பேர் வசிக்கின்றனர்.

85 வீடுகள்

இவர்களுக்கு தமிழ்நாடு அரசின் இலங்கை தமிழர் மறுவாழ்வு ஆணையரகத்தின் மூலம் சிறியவர் முதல் பெரியவர் வரை மாதாந்திர உதவித்தொகை, உடைகள் வழங்கி வருவாய்த்துறை மற்றும் க்யூ பிரிவு போலீசார் அவர்களை பாதுகாத்தும், கண்காணித்தும் வருகின்றனர்.

இவர்கள் கடந்த 2010-ம் ஆண்டு அரசு கட்டித் தந்த சிமெண்டு சீட்டால் மேற்கூரை போட்ட வீடுகளில் குடி இருந்தனர். பின்னர் புதுச்சேரியில் உள்ள தொண்டு நிறுவனம் மூலம் தலா ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் 85 கான்கிரீட் வீடுகள் அரசின் அனுமதியோடு 2013-ல் கட்டி கொடுக்கப்பட்டது.

ஜன்னல், கதவுகள் சேதம்

தற்போது இந்த வீடுகள் பழுதடைந்து மேற்கூரைகள் இடிந்து விழும் நிலையில் இருக்கிறது. சிமெண்டு காரைகள் அனைத்தும் பெயர்ந்து இருப்பதுடன், ஜன்னல், கதவுகள் சேதத்துக்கு உள்ளாகி இருப்பதுடன், சுவர்களில் விரிசலும் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் வீட்டுக்குள் ஒழுகும் நிலையும் உள்ளது.

இங்கு வசிப்பவர்களில் பலர், சுமை தூக்கும் தொழில் போன்ற கூலி வேலைதான் செய்கிறார்கள். இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வருவாயை கொண்டு, முடிந்தவரையில் வீட்டில் ஏற்பட்டுள்ள சேதங்களை சரி செய்து வருகிறார்கள். இருப்பினும் தற்போது பெய்து வரும் மழையால் இப்ப விழுமோ? எப்ப விழுமோ? என்கிற அச்சத்தில் உயிர் பயத்தோடு வாழ்கின்றனர்.

புதிய வீடுகள்

தமிழகத்தில் முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களை பொறுத்தவரை அரசும் பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடங்கள் புதிதாக கட்டித்தரப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார். அதனடிப்படையில் சின்னசேலம் முகாமில் வசிக்கும் மக்களுக்கும் புதிதாக வீடு கட்டிக்கொடுக்க வேண்டும் என்று அங்கு வசிக்கும் மக்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.


Next Story