மகளிர் உரிமைத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்வதா? இல்லத்தரசிகள் ஆவேசம்
குறுஞ்செய்தி கட்டணம், குறைந்தபட்ச இருப்பு காரணமாக உரிமைத் தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்வதற்கு இல்லத்தரசிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கலைஞர் உரிமைத் தொகைத் திட்டத்தின் மூலம் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. அண்ணா பிறந்தநாளான கடந்த 15-ந் தேதி, காஞ்சீபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் மூலம் மொத்தம் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர்களுக்கு தலா ரூ, 1,000 வீதம் வங்கிகள் மூலம் அனுப்பப்பட்டது.
இதுகுறித்த தகவல்கள் பயனாளர்களின் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டது. இதனை பார்த்ததும் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர். சில பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர். காரணம் அவர்கள் வங்கிக் கணக்குகளில் பல்வேறு காரணங்களுக்காக அரசு போட்ட ரூ.1,000-த்தில் இருந்து சிறிய தொகை பிடித்தம் செய்யப்பட்டு இருந்தது. வங்கிகள் இவ்வாறு பிடித்தம் செய்வது சரியல்ல. இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் ஆவேசம் அடைந்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து இல்லத்தரசிகள் கூறிய கருத்துகள் பின்வருமாறு:-
சேவை கட்டணம்
உமாமகேஸ்வரி (இல்லத்தரசி, அனுமந்தநகர்):- ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகையாக வழங்குகிறது. நான் தபால் அலுவலகத்தில் 'ஜீரோ பேலன்ஸ்' முறையில் சேமிப்பு கணக்கு தொடங்கியுள்ளேன். எனது சேமிப்பு கணக்கில் அரசின் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஏற்கனவே வாங்கிய கடன், குறுஞ்செய்தி உள்ளிட்ட பல்வேறு சேவைக்கான கட்டணம் என்று பிடித்தம் செய்துவிடுவதாக புகார் எழுந்துள்ளது. இதுபோன்று அரசு கொடுக்கும் உரிமைத்தொகையை வங்கிகள் பிடித்தம் செய்வதை ஏற்க முடியாது. வரும் காலங்களில் வாடிக்கையாளர்கள் அனுமதியின்றி அவர்களின் சேமிப்பு கணக்கில் இருந்து எந்த தொகையும் பிடித்தம் செய்யாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிடித்தம் செய்ய கூடாது
யமுனா (இல்லத்தரசி, என்.ஊத்துப்பட்டி):- பெண்களின் நலனுக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். பயனாளிகளுக்கு நேரடியாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே வங்கிகள் மூலம் அந்த தொகை செலுத்தப்படுகிறது. ஆனால் சில வங்கிகளில் குறுந்தகவல் சேவை கட்டணம், வருடாந்திர பராமரிப்பு கட்டணம், வங்கிகள் குறிப்பிட்ட இருப்பு தொகையை சேமிப்பு கணக்கில் வைக்காததற்கான கட்டணம் என பல்வேறு கட்டணங்களை பிடித்தம் செய்கின்றனர். இந்த கட்டணங்களை அரசு பெண்களுக்காக செலுத்தும் உரிமைத்தொகையில் இருந்து பிடித்தம் செய்ய கூடாது. அரசு எவ்வளவு செலுத்துகிறதோ அவ்வளவு தொகையையும் அப்படியே பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். அரசின் திட்டத்துக்கு வங்கிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஏமாற்றம் அடைவார்கள்
ரம்யா (இல்லத்தரசி, பழனி):- ஏழை பெண்களுக்கு மாதம்தோறும் நிலையான வருமானம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை அரசு செயல்படுத்தி உள்ளது. அந்த தொகையிலும் வங்கிகள் பல்வேறு காரணங்களை கூறி பிடித்தம் செய்வது நியாயமற்றது. தங்கள் வங்கி கணக்கில் ரூ.1,000 செலுத்தப்பட்டதற்கான குறுந்தகவல் கிடைத்தும், ஏ.டி.எம். மையத்துக்கு சென்று பணம் எடுக்க செல்லும் பெண்களுக்கு கணக்கில் பணம் இல்லை என்று அறிவிப்பு வந்தால் ஏமாற்றம் அடைவார்கள். எனவே அரசு செலுத்திய தொகையை பிடித்தம் செய்யமால் வழங்க வேண்டும்.
சாந்தி (இல்லத்தரசி, நவாமரத்துப்பட்டி):- நான் தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளேன். எனது சேமிப்பு கணக்கில் மகளிர் உரிமைத்தொகையாக ரூ.1,000 செலுத்தப்பட்டுவிட்டது. ஆனால் சில வங்கிகளில் ஏதோ ஒரு காரணத்தை கூறி அவர்களின் சேமிப்பு கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுவதாக எங்கள் பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் பெண்களின் நலனுக்காக அரசு செயல்படுத்திய இந்த திட்டத்தின் பலன் அவர்களுக்கு முழுமையாக கிடைக்காமல் போகும் நிலை உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வங்கிக் கணக்கு மாற்றப்படும்
தமிழக அரசு அதிகாரிகள் கூறும் போது, 'கலைஞர் உரிமைத் தொகை பயனாளர்கள் பெற்ற கடன் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பியதற்கான கட்டணம் உள்ளிட்ட சேவை கட்டணம், வங்கி கணக்கில் குறைந்த பட்ச இருப்பு இல்லாதது போன்ற காரணத்திற்காக சிலருடைய கணக்குகளில் பிடித்தம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து அரசு சார்பில் அனைத்து வங்கிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இதனையும் மீறி வங்கிகள் பயனாளர்களின் கணக்கில் இருந்து பணத்தை பிடித்தம் செய்தால் பயனாளர்களின் கணக்கு பரிவர்த்தனைகள் வேறு வங்கிக்கு மாற்றம் செய்யப்படும். இதுதொடர்பாக பாதிக்கப்படும் இல்லத்தரசிகள், முதல்வரின் முகவரி உதவி மையத்தின் எண் 1100-ல் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.