வீட்டு வசதி வாரிய வீடுகள்- மனைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது
பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது
ஈரோடு வீட்டு வசதி வாரிய வீடுகள், மனைகளுக்கான குலுக்கல் பொதுமக்கள் முன்னிலையில் நடந்தது.
வீட்டு வசதி திட்டம்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஈரோடு வீட்டு வசதி பிரிவு மூலம் ஈரோடு, பள்ளிபாளையம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய இடங்களில் வீடுகள், வீட்டு மனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பலமுறை குலுக்கல் முறையிலும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற திட்டத்திலும் வீடுகள், வீட்டு மனைகள் விற்பனைசெய்யப்பட்டு உள்ளன.
தற்போது காலியாக உள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் மற்றும் வீட்டு மனைகள் விற்பனை அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. ஈரோடு சம்பத்நகர், பெரியார் நகர், முத்தம்பாளையம் வீட்டு வசதி திட்டங்கள் 1 முதல் 8 வரையும், பெருந்துறை, பள்ளிபாளையத்தில் 2 வீட்டு வசதி திட்டங்கள், தாராபுரம் என அனைத்து வீட்டு வசதி திட்டப்பகுதிகளிலும் உள்ள 1,318 இடங்களுக்கான ஒதுக்கீடு நேற்று கொங்கு கலையரங்கில் நடந்தது. இந்த இடங்களை கோரி 1,253 பேர் விண்ணப்பங்கள் போட்டு இருந்தனர்.
குலுக்கல்
அதிகபட்சமாக ஈரோடு முத்தம்பாளையம் பகுதி-5, பகுதி-7, பெருந்துறை திட்டங்களில் காலி இடங்கள் இருந்தன. இவை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. குலுக்கல் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சேலம் சகர மேற்பார்வை பொறியாளர் என்.மூர்த்தி தலைமை தாங்கினார். தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன் (திருப்பூர்), கலால் துறை உதவி ஆணையாளர் எம்.செல்வி (நாமக்கல்), கலால் துறை உதவி ஆணையாளர் சிவக்குமரன் (ஈரோடு) ஆகியோர் குலுக்கல் நடைமுறைகளை கண்காணித்தனர். ஈரோடு வீட்டு வசதிப்பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி எஸ்.கரிகாலன் குலுக்கல் நடத்தினார்.
வருவாய் அதிகாரி ஜெ.பிரியா, கண்காணிப்பாளர் பிரபாவதி, இளநிலை பொறியாளர் ராமநாதன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர். குலுக்கல் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. ஒரு பக்கம் டோக்கன்எண் இன்னொரு பக்கம் மனை எண் போடப்பட்டு முறையாக குலுக்கல் நடத்தப்பட்டது. வீட்டு வசதி வாரியத்தின் யுடியூப் வலைதளத்திலும் குலுக்கல் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
ஒதுக்கீடு பெறப்பட்ட வீடுகள், வீட்டு மனைகள், அடுக்குமாடி வீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தபால் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும் என்று செயற்பொறியாளர் எஸ்.கரிகாலன் தெரிவித்தார்.