குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்க வேண்டும்-ஞானதிரவியம் எம்.பி. பேச்சு


குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்க வேண்டும்-ஞானதிரவியம் எம்.பி. பேச்சு
x

மாஞ்சோலையில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஞானதிரவியம் எம்.பி. கூறினார்.

திருநெல்வேலி

மாஞ்சோலையில் வசிப்பவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தில் வீடு வழங்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டத்தில் ஞானதிரவியம் எம்.பி. கூறினார்.

கண்காணிப்பு குழு கூட்டம்

நெல்லை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், வனஅலுவலர் முருகன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ் மற்றும் பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், தேசிய சுகாதார திட்டம், தீனதயாள் உபாத்தியாய கிராம மின் வசதி திட்டம், பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், தேசிய ஊரக குடிநீர் திட்டம், மாவட்ட நீர்வடிப் பகுதி மேம்பாட்டுமுகமை திட்டம், தேசிய சமூக உதவி திட்டங்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள், தேசிய நில ஆவணங்கள் கணினி மயமாக்கும் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம், தேசிய நெடுஞ்சாலை திட்டம், தேசிய மின் ஆளுமை திட்டம், மாவட்ட முன்னோடி வங்கி, மாவட்ட தொழில் மையம், ஷியாமபிரசாத் முகர்ஜி ரூர்பன் இயக்கம், ஜல்ஜீவன் மிஷின், வேளாண்மை, வனத்துறை, மருத்துவதுறை, பிரதம மந்திரி கிராம முன்னேற்ற திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டத்தில் பேசியவர்கள், குடிநீர் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும். முறையாக குடிநீர் வருவதில்லை. மாஞ்சோலைச் செல்லும் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. மாஞ்சோலைக்கு தனியார் வாகனங்கள் செல்ல அனுமதி கிடையாது. அங்குள்ள வாகனங்களில் செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். அங்கே வசூல் செய்யும் கட்டணம் வனத்துறைக்கு செல்கிறதா? இதை போல் அகஸ்தியர் அருவியில் குளிக்க தற்போது ஒரு நபருக்கு 30 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த பணம் யாருக்கு செல்கிறது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்கள்.

வீடு வழங்க வேண்டும்

இதைத்தொடர்ந்து ஞானதிரவியம் எம்.பி. பேசுகையில், 'நெல்லை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினை தீர்க்க புதிதாக அமைக்கப்பட்ட 6 கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளையும் விரைவாக செயல்படுத்தவேண்டும். அரியநாயகிபுரம் கூட்டுகுடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மாஞ்சோலைக்கு செல்கின்ற சாலையை உடனே சீரமைக்க வேண்டும். நிதி ஒதுக்கப்பட்டு நிதி வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை உடனே பயன்படுத்தி சாலை அமைக்க வேண்டும். அங்கு 1,500 குடும்பங்கள் உள்ளனர். பி.எஸ்.என்.எல். டவர் சரியாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாஞ்சோலை மக்களுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும். கல்லிடைக்குறிச்சியில் அவர்களுக்கு குடிசைமாற்று வாரியத்தில் வீடுகள் வழங்க வேண்டும்' என்றார்.


Next Story