அரசு பள்ளிகளின் வளாகங்கள் பராமரிப்பு எப்படி?


அரசு பள்ளிகளின் வளாகங்கள் பராமரிப்பு எப்படி?
x

அரசு பள்ளிகளின் வளாகங்கள் பராமரிப்பு எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல்

நாம் வாழும் நாட்களில் எத்தனையோ செல்வங்கள் கிடைக்கலாம். அதில் ஒருமுறை நம்மிடம் வந்து விட்டால், எந்நாளும் நம்மைவிட்டு விலகி செல்லாத ஒரே செல்வம் கல்வி. எனவே தான் கல்வியை அழிவில்லாத செல்வம் என்று திருவள்ளுவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

கற்கும் சூழல்

கல்வி கற்கும் இடமும் கோவிலுக்கு நிகரானது. எனவே பள்ளிக்கூடங்கள் தூய்மையாக இருப்பதோடு, இனிமையான கற்றல் சூழலை உருவாக்கும் இடமாக திகழ வேண்டும். எனவே வகுப்பறை மட்டுமின்றி கழிப்பறை, குடிநீர், மைதானம் உள்ளிட்ட வசதிகளும் அவசியம் தேவை. அது மாணவ-மாணவிகளை மட்டுமின்றி பெற்றோரையும் ஈர்த்து விடும்.

அதன்மூலம் மாணவர் வருகையும் அதிகரிக்கும். இந்த விஷயத்தில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது. இதனால் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கின்றன. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 1,983 பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் 3 லட்சத்து 45 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர்.

அரசு பள்ளிகள்

இதில் மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், அரசு பள்ளிகள் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,325 அரசு பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் 955 அரசு தொடக்கப்பள்ளிகள், 200 நடுநிலைப்பள்ளிகள், 81 உயர்நிலைப்பள்ளிகள், 89 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த அரசு பள்ளிகளில் மட்டும் கடந்த கல்வி ஆண்டில் 1 லட்சத்து 39 ஆயிரம் மாணவ-மாணவிகள் படித்துள்ளனர்.

இதில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் பயில்வது குறிப்பிடத்தக்கது. இந்த கல்வி ஆண்டில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கையை உயர்த்த கடும் முயற்சி நடக்கிறது. அரசு பள்ளிகளை பொறுத்தவரை 80 சதவீதத்துக்கு மேல் ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படிக்கின்றனர்.

ஆசிரியர்கள் கருத்து

அதிலும் பெரும்பாலான பெற்றோர் கூலி தொழிலாளர்களாகவும், விவசாய தொழிலாளர்களாகவும் இருக்கின்றனர். எனவே ஏழை, எளிய மாணவ-மாணவிகளுக்கு கல்வி அளிப்பதில் அரசு பள்ளிகளே முதலிடம் வகிக்கின்றன. இதற்காக ஒருசில பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழுவினரின் முயற்சியால் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன.

அங்கு கல்வியின் தரமும் தனியார் பள்ளிகளுக்கு இணையாக இருப்பதாக பெற்றோர் கூறுகின்றனர். அதேநேரம் பல பள்ளிகளில் வகுப்பறை, மைதானம், கழிப்பறை, குடிநீர் வசதிகள் போதுமானதாக இல்லை என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது. இதுதொடர்பாக பெற்றோர், ஆசிரியர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

ஆரோக்கியம்

திண்டுக்கல்லை சேர்ந்த சமூக ஆர்வலர் வேல்குமார்:- அரசு பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை, மைதானம் போன்றவை தூய்மையாக பராமரிக்கப்படுவது இல்லை. இதனால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. ஒருசில பள்ளிகளில் மைதானம் புதர்மண்டி கிடப்பதோடு, மழைநீர் தேங்குகிறது. இதனால் கொசுக்கள் மூலம் தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே பள்ளி வளாகத்தை தூய்மையாக வைப்பதற்கு தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும். ஒருசில பள்ளிகளில் தூய்மை முறையாக கடைபிடிக்கப்படுகிறது. அதை அனைத்து பள்ளிகளிலும் பின்பற்ற வேண்டும்.

மைதானம் இல்லை

வேடசந்தூரை சேர்ந்த ஷர்மிளாபானு:- வேடசந்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து வசதிகள் இருந்தும் மைதானம் இல்லை. மைதானம் மிகவும் குறுகலாக உள்ளது. பிரார்த்தனை நேரத்தில் கூட மாணவிகள் நெருக்கடி மிகுந்த இடத்தில் அமரும் நிலை உள்ளது. இதற்கிடையே 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கு மற்றொரு இடத்தில் கட்டிடம் கட்டப்பட்டது. அங்கும் மைதான வசதி இல்லை. இதனால் மாணவிகளின் விளையாட்டு திறமை வீணாகிறது. எனவே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை மைதானத்துடன் கூடிய வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

கழிப்பறையில் தண்ணீர் வசதி

மணக்காட்டூரை சேர்ந்த சகாபுதீன்:- மணக்காட்டூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். இங்கு கழிப்பறை இருந்தும் போதிய தண்ணீர் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் நிலை உள்ளது. இது சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே கழிப்பறைக்கு போதிய தண்ணீர் வசதி செய்து தரவேண்டும். அதேபோல் பள்ளி மைதானம் சிறியதாக இருப்பதால் மாணவ-மாணவிகளால் விளையாட முடியவில்லை. பெரிய மைதானம் அமைத்தால் மாணவர்களின் விளையாட்டு திறன் வெளிப்படும்.

நத்தம் காமராஜ்நகரை சேர்ந்த தேவகி:- அரசு பள்ளிகளில் ஏழை, எளிய மாணவ-மாணவிகளே அதிக அளவில் படிக்கின்றனர். மழைக்காலத்தில் வகுப்பறைகளில் மேற்கூரை வழியாக மழைநீர் ஒழுகுவதால் சில பள்ளிகளில் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மேலும் கழிப்பறைகளை சுத்தமாக பராமரிப்பது தான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அதற்கு முதலில் தீர்வு காண வேண்டும். அனைத்து பள்ளிகளிலும் தண்ணீர் வசதி செய்து ஊழியர்களை நியமித்து சுத்தம் செய்ய வேண்டும்.

ஆசிரியர்கள் கருத்து

கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், அனைவருக்கும் கல்வி இயக்கம் இருக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் முறையாக நிதி ஒதுக்கப்பட்டு, பள்ளிகளுக்கு கட்டிடம் கட்டப்படுகிறது. ஆனால் அனைவருக்கும் கல்வி இயக்கம் கலைக்கப்பட்ட பின்னர் பள்ளி கட்டிடங்கள் கட்டுவதற்கு நிதி ஒதுக்குவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வகுப்பறை, கழிப்பறைகள் கட்டுவதில் தொய்வு ஏற்பட்டு இருக்கிறது. இது விரைவில் சீராகும் என்றே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம் என்றனர்.

திண்டுக்கல்லை சேர்ந்த ஆசிரியர்கள் கூறுகையில், அரசு பள்ளிகளில் அனுபவம் மற்றும் திறமையான ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் தனியார் பள்ளிகள் மீதான மோகத்தால் பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்க்க தயக்கம் காட்டுகின்றனர். ஒருசில மேல்நிலைப்பள்ளிகளில் குறைந்த அளவே மாணவர்கள் இருப்பதால், பராமரிப்பு மற்றும் கூடுதல் கட்டிட பணிகளை மேற்கொள்ள தயங்கும் நிலை உள்ளது. இதை தவிர்க்கும் வகையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த முயற்சி மேற்கொள்கிறோம். எனவே பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கை கூடினால் வசதிகளும் தானாக வந்துவிடும் என்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

=======

மாணவியின் கோ-கோ கனவு

வேடசந்தூர் அரசு பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவி ஆப்ரின் கூறுகையில், எனக்கு கோ-கோ விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உண்டு. கோ-கோ விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் பள்ளியில் மைதானம் இல்லாததால் விளையாட முடியவில்லை. என்னை போன்று பல மாணவிகளுக்கு விளையாட்டு ஆர்வம் இருந்தும் விளையாட முடியவில்லை. கழிப்பறை, தண்ணீர் உள்ளிட்ட வசதிகள் இருந்தும் இடம் பற்றாக்குறையால் காற்றோட்ட வசதி இல்லை என்றார்.


Next Story