சிதம்பரம் கோவில் விவகாரத்தில் 3-வது நபர் எப்படி வழக்கு தொடர முடியும்? ஐகோர்ட்டு கேள்வி
சிதம்பரம் கோவில் விவகாரம் குறித்து 3-வது நபர் எப்படி வழக்கு தொடர முடியும்? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபையில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து தமிழ்நாடு அரசு கடந்தாண்டு மே 17-ந்தேதி அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், கோவிலின் கால பூஜைகள், அபிஷேகங்கள் கனகசபையில் நடத்தப்படும் சூழலில் பக்தர்களை அங்கிருந்து தரிசனம் மேற்கொள்ள அனுமதிப்பதால் கோவில் வழிபாட்டு நடைமுறைகளில் பாதிப்பு ஏற்படுகிறது. அதனால், அரசாணை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளுக்கு முரணானது. கோவிலின் வழிபாட்டு நடைமுறைகளில் தலையிட அரசுக்கு அதிகாரமும் இல்லை என்பதால் அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
தீட்சிதர்களுக்கு பாதிப்பு
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் கோபால் சுப்பிரமணியம் ஆஜராகி, ''அரசின் இந்த அரசாணை தீட்சிதர்களின் உரிமைகளை பாதிக்கும் வகையில் உள்ளது என்பதால் இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ''இந்த வழக்கில் தீட்சிதர்கள் நீதிமன்றத்தை நாடாத நிலையில் 3-வது நபரான மனுதாரர் எப்படி இந்த வழக்கைத் தொடர முடியும்?'' எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மனுதாரர் தரப்பில், பக்தர்கள் யார் வேண்டுமென்றாலும் இதுதொடர்பாக வழக்கு தொடரலாம் என வாதிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 11-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.