தேனீக்களை பராமரிப்பது எப்படி?


தேனீக்களை பராமரிப்பது எப்படி?
x

தேனீக்களை பராமரிப்பது எப்படி?

திருப்பூர்

பொங்கலூர்

திருப்பூர் மாவட்ட தேனீக்கள் வளர்க்கும் விவசாயிகளுக்கான மழைக்கால மற்றும் பனிக்காலங்களில் தேனீக்களை பராமரிப்பு குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகளான ப.கலையரசன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ம.இளையராஜன் ஆகியோர் கூறியதாவது:

மழைக்காலங்களில் பொதுவாக தேனீக்கள் தேன் மற்றும் மகரந்தங் களை சேகரிக்க வெளியே செல்லாமல் தேனீக்கள் பெட்டியிலேயே இருக்கும். இந்தகாலத்தில் அதற்கு தேவையான உணவை ஏற்கனவே சேகரித்து வைத்திருக்கும் தேனறையிலிருந்து எடுத்து உண்டு உயிர்வாழும். எனவே மழைக்காலத்தில் தேன் எடுப்பதை கண்டிப்பாக தவிர்ப்பதன் மூலம் தேனீக்கூட்டங்கள் இடம ்பெயர்வதை தடுக்கலாம். தேனறையில் தேன் இல்லாமலிருந்தால் தேனீக்கூட்டங்கள் ஓடிவிடும். தேனீ கூட்டங்கள் ஓடாமலிருக்க நாம் தேனீக்களுக்கு இணை உணவாக திராட்சை பழச்சார் அல்லது சர்க்கரை பாகு, அதாவது 100 கிராம் சர்க்கரையை 60 மில்லி குளிர்ந்த நீரில் கரைத்து தயாரித்து தேனறை சட்ட ஊட்டிகளில் இட்டு கொடுக்கவேண்டும். இத்தகைய தேனறை சட்ட ஊட்டிகளால் வேறு தேனீ கூட்டத்தில் இருந்து தேனீக்கள் ஊடுருவுவதை தடுக்கும். தேனீக்களுக்கு நோய் பரவுவதை வெகுவாக தவிர்க்க முடியும்.

இந்த தேனறை சட்ட ஊட்டிகளில் உள்ளே உள்ள வலையமைப்பானது தேனீக்கள் உணவில் மூழ்காமல் வலையை பற்றிக்கொண்டு மேலே பாதுகாப்பாக வெளியேறும்.

மழை, காற்று, சூரிய ஒளி மற்றும் குளிரிலிருந்து தேனீக்களைக் காக்க தேனீ பெபிகளை மூங்கில் கூடை கொண்டு பாதுகாக்கலாம். இக்கூடையின் மேல் பாலிதீன் பைகளை போர்த்துவதால் கூடை மற்றும் தேனீப் பெட்டிகளை மழையிலிருந்து பாதுகாக்க முடியும். மேலும் தேனீக்களுக்கு தேனீ கூட்டின் சீதோஷ்ண நிலையை பராமரிப்பது எளிதாக இருக்கும்.

தேனீ கூட்டினுள் தேனீக்களுக்கு வைக்கப்படும் உணவைத் தேடி வரும் எரும்பை தடுக்க தேனீ பெட்டிகளை நான்கு கால் தாங்கிகளை தவிர்த்து, ஒற்றைக்கால் தாங்கிகளில் வைக்கவேண்டும்.

இத்தகைய தாங்கிகளில் எரும்புகள் ஏறுவதை தடுக்க புனல் பேன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் உபயோகமற்ற இயந்திர எண்ணையை ஊற்றி வைக்கலாம். இந்த புனலிருந்து சிறிது சிறிதாக எண்ணை ஒழுகுவதால் எரும்புகள் தாங்கியில் ஏறாது. மழைக்காலத்தில் மரம், செடிகளில் பூக்கள் அதிகளவில் இல்லாமல் வெறும் இலைகள் மட்டுமே காணப்படும். ஆனால் தென்னைகளில் சற்று பூக்கள் காணப்படும். அதனால் தென்னைக்கு இடையே வளர்க்கப்படும் தேனீக்களுக்கு செயற்கை இணை உணவின் தேவை மிகக்குறைவாகவே இருக்கும். மழைக்காலத்தை அடுத்துவரும் குளிர்காலத்தின் தொடக்கத்தில் சிறிய வகை புல், செடி, கொடிகள் ஆகியவை முதலில் பூக்கத் தொடங்கியவுடன் தேனீக்கள் மிகவும் சுறு சுறுப்பாக தமது வேலையைத் தொடங்கிவிடும். இந்த சமயங்களில் நாம் தேனீக்களுக்கு இணை உணவு கொடுப்பதனால் தேனீக்கள் அதிகளவு பெருகும். பின்பு நாம் தேனீ குடும்பங்களை நம் தேவைக்கேற்ப பிரித்து தேனீ பெட்டிகளை அதிகரிக்க முடியும். இதனால் இயற்கையாகவே தேனீ கூட்டங்கள் பிரிந்து ஓடுவதை தடுக்கலாம். தேனீ பெட்டியை வைக்கும்போது பெட்டியின் நுழைவாயில் பகுதியை காற்று வீசும் திசையை நோக்கி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட நுட்பங்களை தேனீ வளர்க்கும் விவசாயிகள் பயன்படுத்தி குளிர்காலத்தை தொடர்ந்து வரும் தேன் அறுவடை காலமான கோடைகாலத்தில் அதிகளவு தேன் சேகரிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 98948 46449 என்ற கைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும்.

----


Next Story