வனப்பகுதியில் காட்டுத்தீ பரவாமல் தடுப்பது எப்படி?
வனப்பகுதியில் காட்டுத்தீ பரவாமல் தடுப்பது எப்படி?
தளி,
கோடை காலம் வருவதால் வனப்பகுதியில் காட்டுத்தீயை பரவாமல் தடுப்பது எப்படி? என்று மழைவாழ் மக்களுக்கு வனத்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மழைவாழ் மக்கள்
உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. அத்துடன் அரிய வகை உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் வனப்பகுதியை வாழ்விடமாக கொண்டுள்ளது. அது தவிர குருமலை, மேல் குருமலை, பூச்சக்கொட்டாம்பாறை, குளிப்பட்டி, ஈசல்திட்டு, பொறுப்பாரு, கோடந்தூர், தளிஞ்சி, தளிஞ்சிவயல், கீழானவயல், முள்ளுபட்டி, மாவடப்பு உள்ளிட்ட மலை கிராமங்களில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.
வனத்துக்கு உள்ளேயே வசித்து வந்து அதன் பாதுகாப்பை வனத்துறையினர் உடன் இணைந்து உறுதி செய்வதில் மலைவாழ் மக்களின் பங்கு முக்கிய இடம் வகிக்கிறது. அதில் கோடைகாலத்தில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுப்பதிலும், வனத்திற்குள் அசாதாரண சூழல் நிகழ்ந்தால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து அவர்களுடன் மலைவாழ் மக்கள் இணைந்து சீர்செய்தும் வருகின்றனர்.
காட்டுத்தீ
இந்த நிலையில் கோடைகாலத்தில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுப்பதற்கும் காட்டுத்தீ நிகழ்ந்தால் அதை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு முகாம் உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேஷ்ராம் தலைமையில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைவாழ் கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து உதவி வனப்பாதுகாவலர் க.கணேஷ் ராம் கூறியதாவது:-
கோடைகாலம் தொடங்கி உள்ளதால் ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் வளர்ந்துள்ள செடிகள், கொடிகள் மற்றும் புற்கள் வெயிலின் தாக்கத்தினால் காய்ந்து வருகிறது. இதன் காரணமாக காட்டுத்தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் நிலவுகிறது. இதனால் திருப்பூர் வனக்கோட்ட வனப்பகுதியில் அமைந்துள்ள தளிஞ்சி, மஞ்சம்பட்டி, கோடந்தூர், பொருப்பாறு உட்பட்ட 17 மலைவாழ் குடியிருப்புகள் மற்றும் வனஎல்லையில் உள்ள கிராமங்களில் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கோடந்தூர், தளிஞ்சி மலைவாழ் மக்களுக்கும், குதிரையாறு அணை தொடக்கப் பள்ளியிலும் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது வனம் மற்றும் வன உயிரினங்களின் மகத்துவம் அதை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் வனச்சரக அலுவலர்கள் சிவக்குமார், சுரேஷ், மகேஷ் உள்ளிட்ட வனப்பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.