கடலூரில்தீயில் கருகி 5 பேர் பலியானது எப்படி?போலீசிடம் இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம்


கடலூரில்தீயில் கருகி 5 பேர் பலியானது எப்படி?போலீசிடம் இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 10 Feb 2023 12:15 AM IST (Updated: 10 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கடலூரில் தீயில் கருகி 5 பேர் பலியானது எப்படி? என்பது குறித்து போலீசிடம் இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடலூர்


கடலூர் செல்லங்குப்பம் வெள்ளி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி தமிழரசி (வயது 30). இவர்களுக்கு ஹாசினி என்ற 4 மாத பெண் குழந்தை இருந்தது. தியாசாய் (4) என்ற மகனும் இருக்கிறான்.

தமிழரசியின் தங்கை தனலட்சுமி(24) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிதம்பரத்தை சேர்ந்த சற்குரு (32) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு லக்ஷன் என்ற 8 மாத ஆண் குழந்தை இருந்தது.

தனலட்சுமிக்கும், சற்குருவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

தீயில் கருகி 5 பேர் பலி

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு தனலட்சுமி, தனது குழந்தை லக்ஷன், தாய் செல்வி ஆகியோருடன் தமிழரசியின் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் தமிழரசி மற்றும் ஹாசினி மட்டும் இருந்தனர்.

அப்போது பெட்ரோல் கேனுடன் வந்த சற்குரு வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு, தனது உடலில் பெட்ரோல் ஊற்றினார். மேலும் அங்கிருந்தவர்கள் மீதும் பெட்ரோல் ஊற்றியதாக தெரிகிறது.

அந்த சமயத்தில் விறகு அடுப்பில் எரிந்த தீ, அனைவரது மீதும் பரவி எரிந்தது. இதில் தமிழரசி, ஹாசினி, லக்ஷன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சற்குரு, தனலட்சுமி ஆகியோர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலத்த தீக்காயமடைந்த செல்வி, புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விவாகரத்து கேட்டு மிரட்டல்

இதற்கிடையே ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற தனலட்சுமி, உயிரிழப்பதற்கு முன்பு போலீசிடம் வாக்குமூலம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாங்கள் குடும்பத்துடன் வீட்டில் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது தமிழரசி, விறகு அடுப்பில் வெந்நீர் வைத்துக்கொண்டிருந்தார். அப்போது சற்குரு, பெட்ரோல் கேனுடன் வந்து, தனக்கு ஏன் விவாகரத்து தர மறுக்கிறாய்? என்று என்னுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் சற்குரு தனது உடலில் பெட்ரோல் ஊற்றிய போது, அருகில் நின்று கொண்டிருந்தவர்கள் மீதும் கொட்டியது. அந்த சமயத்தில் விறகு அடுப்பிலும் பெட்ரோல் கொட்டியபோது குபீரென்று தீப்பிடித்தது. இந்த தீ அனைவர் மீதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் அங்கும், இங்குமாக ஓடினார்கள். அதன்பிறகு நானும் சரிந்து விழுந்து விட்டேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சற்குரு தான் அனைவரது மீதும் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்து விட்டார் என தகவல் பரவிய நிலையில், தற்போது விவாகரத்து கேட்டு மிரட்டுவதற்காக தனது உடலில் சற்குரு பெட்ரோல் ஊற்றிய போது, அனைவரது உடலிலும் பட்டு, 5 பேர் தீயில் கருகி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story