விபத்தில் சிக்கி 6 பேர் பலியானது எப்படி?-உருக்கமான தகவல்கள்
6 பேர் விபத்தில் சிக்கி பலியானது எப்படி? என்ற உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன.
துக்க நிகழ்ச்சி
ஆத்தூர் அருகே புதுப்பேட்டை லீ பஜார் வக்கீல் கிட்டா முஸ்தபா தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் என்பவர் உயிரிழந்ததால், அவருக்கு 30-வது நாள் துக்கம் அனுசரிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க, அவருடைய நெருங்கிய உறவினர்கள் பலர் நேற்று முன்தினம் இரவு வந்திருந்தனர். இதனால் ஆறுமுகத்தின் வீட்டில் போதிய இடவசதி இல்லாததால் பலர் வீட்டின் வெளிப்பகுதியில் இருந்தனர்.
அப்போது அவர்கள் வீட்டுக்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். நாம் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கிறோம். மீண்டும் எப்போது சந்திப்போம் என தெரியாது. அதனால் கடைக்கு சென்று ஏதாவது சாப்பிட்டு வந்து மீண்டும் அமர்ந்து பேசலாம் என முடிவு செய்தனர். இதற்காக வேன் டிரைவர் ராஜேசை, வேனை எடுக்க ெசால்லி அனைவரும் வற்புறுத்தி உள்ளனர். அதில் போட்டி, போட்டுக்கொண்டு 11 பேர் ஏறி உள்ளனர்.
ஐஸ்கிரீம் சாப்பிட்டனர்
முதலில் அவர்கள் ஆத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு குளிர்பான கடைக்கு சென்று குளிர்பானங்கள், ஜூஸ் வகைகள், ஐஸ்கிரீம்கள் சாப்பிட்டனர். பின்னர் ஆறுமுகத்தின் வீட்டுக்கு வந்தனர். அதன்பிறகு நள்ளிரவு 12 மணி அளவில் மீண்டும் அவர்கள் டீ, காபி ஏதாவது குடித்து விட்டு, ஆத்தூர் அருகே முல்லைவாடியில் உள்ள ஒரு உறவினரை பார்த்து விட்டு வரலாம் என்று வேனில் புறப்பட்டனர்.
அப்போது தான் துலுக்கனூர் புறவழிச்சாலையில் சென்ற போது வேன் விபத்தில் சிக்கி அதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். டீ, காபி குடிக்க செல்லாமல் இருந்து இருந்தால் இந்த கோர விபத்து ஏற்பட்டு இருக்காது. துக்க நிகழ்ச்சிக்கு வந்த இடத்தில் விபத்தில் சிக்கி 6 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் துக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.