சிறுவன் உள்பட 6 பேர் கைதானது எப்படி?
புதுக்கோட்டையில் தொழிலாளி கொலை வழக்கில் சிறுவன் உள்பட 6 பேர் கைதானது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
சிறையில் அடைப்பு
புதுக்கோட்டை டி.வி.எஸ். சண்முகாநகரில் வசித்தவர் தமிழ்செல்வன் (வயது 45). தொழிலாளியான இவர் கடந்த 30-ந் தேதி இரவு வீட்டின் முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொலையாளிகள் தப்பியோடிய நிலையில், அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. சொத்து தகராறு காரணமாக தமிழ்செல்வனை அவரது அண்ணன் ராஜேந்திரன் மகன் மதிவாணன் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மதிவாணன் மற்றும் அவரது கூட்டாளிகள் என மொத்தம் 6 பேரை போலீசாரிடம் நேற்று முன்தினம் கைது செய்தனர். இதில் ஒருவர் 17 வயது சிறுவன் ஆவார். சிறுவனை திருச்சி சிறார் இல்லத்தில் அடைத்தனர். மற்றவர்கள் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
இந்த நிலையில் கொலையாளிகள் சிக்கியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. கொலையாளிகள் தப்பியோடிய போது மதிவாணனை தமிழ்செல்வனின் மனைவி அடையாளம் கண்டுள்ளார். இதனை அவர் போலீசார் தெரிவித்திருந்தார். இதனால் மதிவாணனை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அவர்கள் கார், இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்றிருக்கலாம் என போலீசார் கருதி விசாரித்தனர். மேலும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த கும்பல் காரில் திருச்சி தப்பிச்சென்றது தெரியவந்தது. இதற்கிடையில் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் காருக்கு பெட்ரோல் நிரப்பியது தெரிந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் திருச்சி சென்று அவர்களை பிடித்து வந்தனர். கைதானவர்கள் மதிவாணனின் நண்பர்கள் ஆவார்கள். அவர்கள் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்துள்ளனர். நண்பருக்காக சேர்ந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.