சென்னை வங்கி கொள்ளை நடந்தது எப்படி...? பரபரப்பு தகவல்கள் ; 7 பேருக்கு தொடர்பு ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள் ...!


சென்னை வங்கி கொள்ளை நடந்தது எப்படி...? பரபரப்பு தகவல்கள் ; 7 பேருக்கு தொடர்பு ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள் ...!
x
தினத்தந்தி 15 Aug 2022 1:03 PM IST (Updated: 15 Aug 2022 5:16 PM IST)
t-max-icont-min-icon

வங்கிக் கொள்ளை எப்படி நடந்தது? 72 மணி நேரத்தில் 4 கொள்ளையர்களை பிடித்தது எப்படி? என பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் நேற்று முன்தினம் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வங்கியின் சார்பில் பொது மக்களிடம் இருந்து அடமானமாக பெற்றிருந்த நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இதனால் வங்கி கிளை முன்பு வாடிக்கையாளர்கள் திரண்டனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் இதே வங்கியின் இன்னொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றிய முருகன் என்பவர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

முருகன், தனது 'ஜிம்' நண்பர்கள் சிலருடன் சேர்ந்து திட்டம் போட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது கண்டு பிடிக்கப்பட்டது. பெடரல் வங்கியில் கொள்ளை அடிப்பதற்கு முருகன் மூளையாக செயல்பட்டதும், கொள்ளை கும்பலுக்கு தலைவனாக செயல்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து முருகனின் செல்போன் எண்ணை வைத்து துப்புதுலங்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டினர். போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் அண்ணாநகர் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படை போலீசார் முருகனையும் அவரது கூட்டாளிகளையும் பிடிக்க வலை விரித்தனர்.

இதில் முருகனுடன் சேர்ந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தோஷ், பாலாஜி, சக்திவேல் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 20 கிலோ நகைகள் மீட்கப்பட்டன. பெடரல் வங்கியில் கொள்ளை அடிக்கப்பட்ட 32 கிலோ நகைகளில் இவர்கள் 3 பேரும் 20 கிலோ நகைகளை பங்கு போட்டு பிரித்து எடுத்துக் கொண்டது தெரியவந்துள்ளது.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முருகனுடன் சேர்ந்து பல நாட்கள் திட்டம் போட்டதாகவும், பின்னரே கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாகவும் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

கைதான 3 பேரிடம் முருகன் பற்றிய தகவல்களையும் போலீசார் திரட்டி உள்ளனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கொள்ளை கும்பல் தலைவன் முருகன் தப்பிஓடி தலைமறைாகி இருந்தார்.முருகனை பிடிக்க 4 தனிப்படைகள் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி வந்தன. இந்த நிலையில் போலீசார் முருகைனை இன்று கைது செய்தனர்.

இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜீவால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

அரும்பாக்கம் வங்கியில் ஊழியர்களை கட்டிப்போட்டு 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதுஇதுவரை 3 பேரை கைது செய்யபட்டு உள்ளனர். முதற்கட்டமாக 18 கிலோ தங்கம் மீட்கப்பட்டுள்ளது.இன்னும் ஓரிரு நாட்களில் எஞ்சிய 14 கிலோ நகைகளை கைப்பற்றி விடுவோம். 2 பேரை தேடி வருகிறோம். கொள்ளை நடந்த போது வங்கியில் 3 ஊழியர்கள் தான் இருந்துள்ளனர்.

துப்பாக்கி முனையில் கொள்ளை நடைபெறவில்லை, கொள்ளையர்கள் கத்தி வைத்திருந்தனர், ஆனால் அதை பயன்படுத்தவில்லை; அவர்கள் மீது எந்த ஒரு குற்ற வழக்குகளும் இல்லை.

முன்கூட்டியே திட்டமிட்டு இந்த கொள்ளை நடத்தப்பட்டிருக்கிறது . 7 பேர் கொண்ட குழுவினர் கொள்ளை சம்பவத்திற்கான திட்டம் தீட்டியுள்ளனர். ஒரே பள்ளியில் பயின்றவர்கள் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.கடந்த 10 நாட்களாக கொள்ளைக்கு திட்டம் தீட்டியுள்ளனர்.குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்தும், சிசிடிவி கேமராவில் ஸ்ப்ரே அடித்தும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனைவரும் ஒரே பள்ளியில் படித்த நண்பர்கள். கொள்ளையர்களில் சூர்யா என்ற இளைஞர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 2, 3 நாட்களில் கொள்ளையடிக்கப்பட்ட அனைத்து நகைகளும் மீட்கப்படும்.

கொள்ளையில் ஈடுபட்டவர்கள் எளிதில் வங்கியில் கொள்ளை அடித்துத் தப்பிக்கலாம் என்று நினைத்து கொள்ளையில் ஈடுபட்டனர். கொள்ளையடிக்க செல்லும்பொழுது இரண்டு இருசக்கர வாகனங்களை பயன்படுத்தினர். வங்கியில் எச்சரிக்கை மணி ஒலிக்காதது குறித்து விசாரணை நடைபெறும் என கூறினார்.


Next Story