தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 500 பவுன் நகைகளை திருடிய வாலிபர் சிக்கியது எப்படி? ஆத்தூர் போலீசார் பரபரப்பு தகவல்


தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில்  500 பவுன் நகைகளை திருடிய வாலிபர் சிக்கியது எப்படி?  ஆத்தூர் போலீசார் பரபரப்பு தகவல்
x

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 500 பவுன் நகைகளை திருடிய வாலிபர் போலீசில் பிடிபட்டது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

சேலம்

ஆத்தூர்,

ஒரே மாதிரி திருட்டு

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கலியன். ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியரான இவர் கடந்த மாதம் வீட்டை பூட்டிவிட்டு சென்ற போது 20 பவுன் நகை திருட்டு போனது.

அதேபோல தலைவாசல் வீரகனூர் சேலம், திருச்சி பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 45-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த திருட்டும், ஆத்தூர் பகுதியில் நடந்த திருட்டும் ஒரே மாதிரியாக இருந்தது. எனவே ஒரே நபர் தான் இது போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது போலீசாருக்கு தெரிய வந்தது.

மேலும் பூட்டிய வீடுகளை கண்காணித்து கதவை உடைத்து உள்ளே நுழைந்து திருடும் இந்த மர்ம நபரை, ஆத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் குற்றப்பிரிவு போலீசார் அடங்கிய தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

மோட்டார் சைக்கிள் திருட்டு

இந்த நிலையில் துறையூரை சேர்ந்த வினோத்குமார் என்பவர் மோட்டார் சைக்கிளில் ஆத்தூர் வந்தார். அங்கு பஸ் நிலையம் அருகே நிறுத்திவிட்டு சென்ற அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதையடுத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர்.

அப்போது அந்த திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் போயர் தெருவை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் வெங்கடேஷ் (வயது 27) என்பது தெரிய வந்தது.

அவர் திருச்சியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருட்டு குற்ற வழக்கில் கைதாகி சிறையில் இருந்து விட்டு வெளியே வந்து மீண்டும் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மோட்டார் சைக்கிள் மற்றும் 18 பவுன் நகையை அவரிடம் இருந்து மீட்டனர்.

வாக்குமூலம்

இதையடுத்து போலீஸ் விசாரணையில் வெங்கடேஷ் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பல்வேறு குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்ட நான் வழக்கு செலவுக்காக திருட தொடங்கினேன். மேலும் நான் திருட தொடங்கிய காலம் முதலே உல்லாசமாகவும், ஜாலியாகவும் செலவு செய்து கொண்டு சுற்றி வந்தேன். கொள்ளை அடிப்பது, மோட்டார் சைக்கிள் திருடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தேன்.

எனக்கு தற்போது திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் பணம் தேவை அதிகமாக இருந்ததாலும், வழக்கு செலவுகளுக்காகவும் அதிக அளவில் திருட்டு செயல்களில் ஈடுபட்டு வந்தேன். என் மீது 7 மாவட்டங்களில் 50-க்கும் அதிகமான திருட்டு குற்ற வழக்குகள் உள்ளன. திருடும் நகைகளை சேலத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் கொடுத்து பணமாக்கி வந்தேன் மற்றும் பல்வேறு இடங்களில் இடைத்தரகர்கள் மூலமும் விற்பனை செய்து வந்தேன்.

500 பவுன் நகைகள்

மத்திய பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற கள்ளக்குறிச்சியில் வசித்து வந்த அதிகாரி ஒருவர் வீட்டில் நுழைந்து 15 பவுன் நகை மற்றும் ரொக்கம் ஆகியவற்றை திருடி சென்றேன். இந்த திருட்டு வழக்கு தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் போலீசார் என்னை கைது சிறையில் அடைத்து இருந்தனர்.

தினமும் பகலில் பூட்டிய வீடுகளை கண்காணித்து, இரவு நேரங்களில் புகுந்து திருடுவதை தொழிலாக வைத்திருந்தேன். கண்காணிப்பு கேமராவில் பதிவானதை வைத்து ஆத்தூர் போலீசார் என்னை பிடித்து விட்டனர்.

இவ்வாறு வெங்கடேஷ் கூறியுள்ளார். மேலும் பல்வேறு மாவட்டங்களில் 45-க்கும் மேற்பட்ட இடங்களில் கைவரிசை காட்டி 500 பவுன் நகைகளை வெங்கடேஷ் அபேஸ் செய்துள்ளார் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்


Next Story