அரசு பள்ளி வளாகங்கள் பராமரிப்பு எப்படி?ஆசிரியர், பெற்றோர் கருத்து


அரசு பள்ளி வளாகங்கள் பராமரிப்பு எப்படி?ஆசிரியர், பெற்றோர் கருத்து
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகளில் வளாகங்கள் எப்படி பராமரிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தேனி மாவட்ட ஆசிரியர், பெற்ேறார்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.

தேனி

தேனி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் 409 பள்ளிகள், 85 கள்ளர் பள்ளிகள், 9 ஆதிதிராவிடர் நல பள்ளிகள், 26 நகராட்சி பள்ளிகள், 2 பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகள் என மொத்தம் 531 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

நடுத்தர குடும்பத்தினர்

இந்த பள்ளிகளில் படிக்கும் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், ஏழை எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

இவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.36 ஆயிரம் வரை மட்டுமே. குறிப்பாக 10-ம் வகுப்பு வரை பயிலும் பெரும்பான்மையான மாணவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள்.

பல விதமான சமூக, பொருளாதார சூழ்நிலைகளில் மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகளில் பயின்றாலும், அனைத்து மாணவர்களும் சமமாகவே நடத்தப்படுகின்றனர். மாவட்டத்தில் உள்ள அனைத்து விதமான பள்ளிகளில் நடப்பு நிதியாண்டின்படி 65 ஆயிரத்து 542 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் படித்து வரும் அரசு பள்ளிகளில் கல்வியின் தரம், வகுப்பறை, பள்ளி வளாகம், கழிப்பறை, விளையாட்டு மைதானம் போன்றவை எப்படி இருக்கின்றன என்பது பற்றி பெற்றோர், ஆசிரியர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

பாம்புகள் நடமாட்டம்

வருசநாட்டை சேர்ந்த தொழிலாளி மாயி கூறும்போது, 'கடமலை-மயிலை ஒன்றிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் போதிய கட்டிட வசதி இல்லை. வகுப்பறைகள் சுத்தமாக பராமரிக்கப்படுவது இல்லை. சில பள்ளிகளில் கழிப்பிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் கழிப்பிடத்தை சுற்றிலும் செடிகள் வளர்ந்து புதர்மண்டிக் கிடக்கிறது.

பாம்புகள் நடமாட்டம் இருக்குமோ என்ற அச்சமும் உள்ளது. அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கட்டிட வசதி, விளையாட்டு மைதான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் முன்வருவார்கள்' என்றார்.

வகுப்பறைகள் ஆக்கிரமிப்பு

தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர் நாகராஜ் கூறும்போது, 'நான் 8 ஆண்டுகளுக்கு முன்பு அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். அப்போது வகுப்பறை கட்டிடங்கள் மோசமாக இருந்தன. பின்னர் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கூடுதல் வகுப்பறைகளும் கட்டப்பட்டன. ஆனால், கூடுதல் வகுப்பறைகளை கல்வித்துறை சார்ந்த அலுவலகங்கள் ஆக்கிரமித்துள்ளன. குறிப்பாக இந்த பள்ளி வளாகத்தில் தான் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலகம், மாவட்ட இடைநிலைக் கல்வி அலுவலகம், தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலகம், அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், மாலை நேர கல்லூரி, வட்டார வள மையம் போன்றவை செயல்படுகின்றன.

ஒருங்கிணைந்த கல்வித்துறை அலுவலகம் அமைத்து இந்த அலுவலகங்களை அங்கே இடமாற்றம் செய்ய வேண்டும். கூடுதல் வகுப்பறைகளில் இதர அலுவலகங்கள் செயல்படுவதால் மாணவர்களுக்கு வகுப்பறை பற்றாக்குறை உள்ளது. விளையாட்டு மைதானம் இருந்தும் பயனில்லை. கூடைப்பந்து மைதானம் அமைத்த போதிலும் பராமரிப்பு இல்லை. அதை சுற்றிலும் புதர்மண்டிக் கிடக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் மாணவர்கள், தன்னார்வலர்கள் இணைந்து மைதானத்தை முழுவதும் தூய்மைப்படுத்தினோம். அதன்பிறகும் பராமரிப்பு செய்யாமல் விட்டதால் தற்போது பாம்புகள் நடமாட்டம் உள்ளது. கழிப்பிடங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. குடிநீர் குழாய்கள் உடைந்து கிடக்கின்றன. 1 லட்சம் மக்கள் தொகை உள்ள தேனி அல்லிநகரம் நகராட்சியில் இருக்கும் ஒரே ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி இதுவாகும்' என்றார்.

விளையாட்டு மைதானம்

கம்பம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் செந்தில்குமார் கூறும்போது, 'மாணவர்களுக்கு கல்வி எந்த அளவுக்கு முக்கியமோ, அதேபோல் மாணவர்களின் உடல் நலனை மேம்படுத்தும் விளையாட்டு வகுப்புகளும் முக்கியம். கம்பம் பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் விளையாட்டு வகுப்புகள் இருந்தும் பயனற்றதாகவே உள்ளது. ஏனெனில் அரசு பள்ளிகளில் விளையாட்டு மைதானம் அமைக்க போதிய இடவசதி இல்லை. கம்பம் நகரில் உள்ள பள்ளிகளில் தனித்தனியாக விளையாட்டு மைதானம் அமைக்க வாய்ப்பு இல்லை என்றால், அனைத்து பள்ளிகளுக்கும் பொதுவான அரசு விளையாட்டு மைதானம் நகராட்சி பகுதியில் அமைக்கலாம்.

இதேபோல், கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்படுவது இல்லை. போதிய வகுப்பறை கட்டிடங்கள் இல்லை. ஆசிரியர்கள் தரமாக இருந்தால் மட்டும் போதாது. தனியார் பள்ளிகளில் கல்வியோடு சுற்றுச்சூழலும் நல்ல நிலையில் இருப்பதால் தான் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை தேடிச் செல்கின்றனர். அரசு பள்ளிகளை முறையாக பராமரித்து, போதிய கழிப்பிட, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தினால் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளின் செயல்பாடு சிறப்பாக இருக்கும்' என்றார்.

சமூக விரோதிகள்

தாமரைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பொன்.பாலமுருகன் கூறும்போது, 'கல்வித்துறை தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் அரசு பள்ளிகளில் கூடுதலாக கழிப்பிட வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பிடங்களை அமைக்க வேண்டும். தாமரைக்குளம் அரசு பள்ளியில் பாதுகாவலர் இல்லாததால் சமூக விரோதிகள் இரவு நேரங்களில் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்து கண்காணிப்பு கேமராக்களை உடைப்பது, பொருட்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டிடங்களில் ஆபாசமான வார்த்தைகளை எழுதி வைக்கின்றனர். அதை தடுக்க வேண்டும். கூடுதல் கட்டிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பிரசாரங்களை அதிக அளவில் நடத்த வேண்டும்' என்றார்.

அதிக சேர்க்கை

அரசு பள்ளி ஆசிரியைகள் கூறும் போது, 'தேனி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் திறமையான, அனுபவமும், கல்வித் தகுதியும் உடைய ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய அளவில் ஆசிரியர்கள் பணியில் இருக்கிறார்கள். தற்போது அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளை சேர்க்க வீடுதோறும் சென்று பெற்றோர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறது.

இதனால், அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கை அதிகரித்து வருகிறது. பள்ளியை சுத்தமாக வைத்துக் கொள்ள பள்ளிக்கு அருகாமையில் வசிக்கும் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். பள்ளி நேரங்களில் பள்ளியை ஆசிரியர்கள் கண்காணித்துக் கொள்கிறோம். விடுமுறை நாட்களில் பிற நபர்கள் பள்ளிக்குள் புகுந்து சேதப்படுத்தாமல் தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அவசியம். உட்கட்டமைப்பில் சில குறைபாடுகள் இருந்தாலும் தனியார் கல்வி நிறுவனங்களை விட சிறப்பான கல்வி அளிக்கும் சவாலை ஏற்று செயல்பட்டு வருகிறோம்' என்றனர்.


Next Story