கரூர் மாநகராட்சி பள்ளி வளாகங்கள் பராமரிப்பு எப்படி?
கரூர் மாநகராட்சி பள்ளி வளாகங்கள் பராமரிப்பு எப்படி? பெற்றோர் மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கரூர் மாநகராட்சியின் கீழ் 5 தொடக்கப்பள்ளி, 4 நடுநிலைப்பள்ளி, 2 உயர்நிலைப்பள்ளி, 2 மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 13 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
வளர்ச்சி அடைகிறது
இந்த பள்ளிகளில் ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளில் சுமார் 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.
இப்பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், லேப் வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு நிகராக தற்போது பள்ளி வகுப்பறைகள், ஸமார்ட் கிளாஸ் போன்ற வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் அரசு எடுத்து வரும் பல்வேறு திட்டங்களால் இப்பள்ளிகள் மேலும் வளர்ச்சி அடைந்து வருகின்றன.
மாணவர் சேர்க்கை அதிகரிப்பு
தமிழ் வழி, ஆங்கில வழி முறைகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருவதால் முன்பை விட தற்போது மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்பட்டு அதிக அளவிலான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
தற்போது அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு நடவடிக்கைகள், திட்டங்கள், மாணவ, மாணவிகளுக்கான திட்டங்களால் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
மாநகராட்சி பள்ளிகளில் கல்வியின் தரம், வகுப்பறை, விளையாட்டு பள்ளி வளாகம், கழிவறை, விளையாட்டு மைதானம் போன்றவை எப்படி இருக்கின்றன? என்பது பற்றி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
தூய்மையாக இருக்கும்
பசுபதிபாளையத்தை சேர்ந்த மாணவர் கபிலேஷ்:-
எங்களது பள்ளி வகுப்பறைகள் எப்போதும் சுத்தமாக இருக்கும். மாணவர்கள் அமர்ந்து படிக்கும் மேஜைகள், சேர்கள் நன்றாக இருக்கும். கம்ப்யூட்டர், லேப் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. லேப் வகுப்புகளும் மிகவும் தூய்மையாக இருக்கும்.
கழிவறை வசதிகள் கூட நன்றாக உள்ளது. அடிக்கடி சுத்தம் செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. புதிய கட்டிடங்களில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதனால் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. ஆசிரியர்களும் சிறந்தமுறையில் பாடங்களை சொல்லி கொடுக்கின்றனர்.
சிறந்த முறையில் பாடம்
வெண்ணைமலையை சேர்ந்த மாணவர் ஒருவர் கூறுகையில்,மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறேன். இப்பள்ளியில் வகுப்பறைகள் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்கும். அரசுப்பள்ளி போன்று இல்லாமல் தனியார் பள்ளிகளுக்கு நிகராக வகுப்பறைகள் உள்ளன. அனைத்து வகுப்பறைகளும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையாக இருக்கும். ஆசிரியர்கள் சிறந்த முறையில் எங்களுக்கு பாடங்களை சொல்லி கொடுத்தனர். எளிதில் பாடங்களை புரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தினர். மேலும் குடிநீர் வசதிக்கு பஞ்சமில்லை, கழிவறை வசதி நன்றாக உள்ளது.
தரம் உயர்ந்து வருகிறது
கரூரை சேர்ந்த இல்லத்தரசி வசந்தி:-
அரசுப்பள்ளிகளில் தற்போது அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பள்ளி வகுப்பறைகள், கழிவறைகள் அனைத்தும் தினமும் சுத்தம் செய்யப்படுகிறது. இதேபோல் கம்ப்யூட்டர் லேப் வசதி உள்ளிட்ட வசதிகள் உள்ளது. இதேபோல் ஆசிரியர்களும் பாடங்களை நன்றாக சொல்லி கொடுக்கின்றனர். அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளால் மாநகராட்சி பள்ளிகளில் தரம் உயர்ந்து வருகிறது.
தனியார் பள்ளிகளுக்கு நிகராக தற்போது மாநகராட்சி அரசுப்பள்ளிகளிலும் இயங்கி வருகிறது. அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழி முறைகள் உள்ளதால், தற்போது எல்.கே.ஜி., யு.கே.ஜி., குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்கு பதிலாக மாநகராட்சி பள்ளிகளிலே சேர்க்கலாம். மாநகராட்சி பள்ளிகளில் பெரிய அளவில் விளையாட்டு மைதானங்கள் அமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
ஆங்கிலம்-தமிழ் கல்விமுறை உள்ளது
கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரேவதி:-
கரூரின் மையப்பகுதியில் உள்ள எங்கள் பள்ளி 100 ஆண்டுகள் பழமையானது. எங்கள் பள்ளியில் ஸ்மாட் கிளாஸ் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது. எங்களது பள்ளியில் அனைத்து பிரிவுகளுக்கும் ஆங்கிலம் மற்றும் தமிழ் கல்விமுறை உள்ளது. முன்பை விட பள்ளியில் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் வெளிவந்த பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவில் எங்கள் பள்ளியை சேர்ந்த 2 மாணவர்கள் கணக்குபதிவியல், வணிகவியல் பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 5 பாடங்களில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளோம். 500-க்கு மேல் 5 பேரும் மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ரூ.7 கோடியில் ஸ்மார்ட் கிளாஸ்
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, கரூர் மாநகராட்சியின் கீழ் 13 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தொடக்கப்பள்ளி 5, நடுநிலைப்பள்ளி 4, உயர்நிலைப்பள்ளி 2, மேல்நிலைப்பள்ளி 2 என மொத்தம் 13 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகள் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தனியார் பங்களிப்புடன் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் 13 வகுப்பறைகள் ஸ்மார்ட் கிளாஸ் முறையில் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் 11 பள்ளிகளில் ரூ.7 கோடியே 48 லட்சத்தில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் 2,966 மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும் இதுபோன்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன, என்றார்.
பெற்றோர் ஆர்வம்
கரூர் மாநகராட்சி பள்ளி ஆசிரியைகள் கூறும்போது, கரூர் மாநகராட்சி பள்ளிகள் அனைத்திலும் திறமையான, அனுபவமும், கல்வித்தகுதியும் உடைய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுத்து வருகிறோம்.
மாநகராட்சி பள்ளிகளில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஸ்மார்ட் வகுப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. பெற்றோர்களும் மாநகராட்சி பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றன. மேலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்பட்டு அதிக அளவிலான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது வீடுகளுக்கு சென்று பெற்றோர்களை சந்தித்து தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி வருகிறோம், மாநகராட்சி பள்ளியில் அனைத்து பாடப்பிரிவிற்கும் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வி உள்ளது, என்றனா்.