உத்தமர் காந்தி விருது பெற ஊராட்சிகள் விண்ணப்பிப்பது எப்படி?
உத்தமர் காந்தி விருது பெற ஊராட்சிகள் விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்,
உத்தமர் காந்தி விருது பெற ஊராட்சிகள் விண்ணப்பிப்பது எப்படி? என்பது குறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
உத்தமர் காந்தி விருது
சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறந்த ஊராட்சிகளை தேர்வு செய்ய கலெக்டர் தலைமையில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர், ஊராட்சி உதவி இயக்குனர் மற்றும் அரசு சாரா நிறுவனம் ஆகியோரை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான தேர்வுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்வு குழுவினரின் பரிந்துரையை, மாநில ஊரக வளர்ச்சிதுறை ஆணையர் தலைமையிலான உயர்மட்ட தேர்வுக்குழுவினர் பரிசீலனை செய்து மாவட்டத்துக்கு ஒரு ஊராட்சி வீதம் 37 ஊராட்சிகளை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரைப்பார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த விருது சுதந்திர தினம் அல்லது ஏதேனும் ஒரு சிறப்பு தினத்தில் தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்படும். விருது பெறும் ஊராட்சிக்கு ரூ.10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும். இந்த தொகையில் ஊராட்சி வளர்ச்சி பணிகளை செயல்படுத்தலாம். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கிராம ஊராட்சி நிர்வாகத்தினர் http;//tnrd.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் வருகிற 17-ந்தேதிக்குள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் முகவரி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி முன் நுழைவு செய்து படிவத்தை பதிவு செய்ய வேண்டும்.
இந்த தகவலை ராமநாதபுரம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.