2022 விடைபெறுகிறது; உதயமாகிறது 2023-புதிய ஆண்டு எப்படி இருக்க வேண்டும்?; பொதுமக்கள் எதிர்பார்ப்பு


2022 விடைபெறுகிறது; உதயமாகிறது 2023-புதிய ஆண்டு எப்படி இருக்க வேண்டும்?; பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x

2022-ம் ஆண்டு விடைபெற்று, 2023-ம் ஆண்டு உதயமாக இருக்கிறது. புதிதாக பிறக்கும் ஆண்டு எப்படி இருக்க வேண்டும்? என்ற தங்களது எதிர்பார்ப்புகளை பொதுமக்கள் பதிவு செய்து இருக்கிறார்கள்.

திண்டுக்கல்

2022-ம் ஆண்டு விடைபெற்று, 2023-ம் ஆண்டு உதயமாக இருக்கிறது. புதிதாக பிறக்கும் ஆண்டு எப்படி இருக்க வேண்டும்? என்ற தங்களது எதிர்பார்ப்புகளை பிரபலங்கள் உள்பட சிலர் பதிவு செய்து இருக்கிறார்கள்.

அதன் விவரம் வருமாறு:-

பொருளாதார முன்னிலை

பொருளாதார துறையில் புலமை வாய்ந்த ஓய்வுப்பெற்ற பொருளாதார பேராசிரியர் இல.வெங்கடசாமி:-

உலக அளவில் இந்திய பொருளாதாரம் 3-வது இடத்தில் இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளே தள்ளாடிப் போன சூழலில், இந்தியா ஓரளவு மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கிறது. உற்பத்தி, தொழில் மற்றும் சேவைத் துறைகளில் பழைய நிலைக்கு வந்துள்ளோம். வேளாண் துறையிலும் தன்னிறைவை அடைந்திருக்கிறோம். ஜி-20 மாநாட்டுக்கு பிரதமர் நரேந்திரமோடி தலைமை தாங்குவது, உலகளவில் இந்தியாவுக்கு பெருமை. உலக நாடுகளும் இதைத்தான் எதிர்பார்க்கின்றன.

ஊழலில்லாத இந்தியாவை உருவாக்க பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டிருக்கிறது. எனவே பிறக்கவுள்ள 2023-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் நிச்சயம் முன்னிலைக்கு வரும். அதற்கான சாத்தியக்கூறுகள் ஏராளமாக இருக்கிறது. உலகளவில் முதல் இடத்தை நமது நாட்டின் பொருளாதாரம் பிடித்தாலும் ஆச்சரியம் கொள்வதற்கில்லை.

சின்னத்திரை நடிகை

'பூவிழி வாசலிலே' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது சின்னத்திரையில் ஜொலிக்கும் நடிகை சுஜிதா:-

ஒவ்வொரு நாடக தொடருமே பல தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உள்ளடக்கியது. கொரோனா காலத்தில் சின்னத்திரையும், சினிமா துறையும் முடங்கியபோது, ஏராளமான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்தனர். கிட்ட இருந்து கூட அவர்களுக்கு உதவ முடியாத சூழலை காலம் ஏற்படுத்தியது. அது கொடுமையான காலம். தற்போது அந்த சூழலில் இருந்து மீண்டு வருகிறோம். புதிய வருடம் கலைத்துறைக்கு இன்னும் நல்ல ஆண்டாக அமையவேண்டும். நல்ல படங்கள் வெளியாக வேண்டும். சின்னத்திரை தொடர்களும் நிறைய எடுக்கப்பட வேண்டும்.

தொடர்கள் நீண்ட நாள் ஓடவேண்டும். அப்போது தான் தொழிலாளர்கள் அனைவருமே நன்றாக இருக்கமுடியும். எனவே இனி வரும் ஆண்டு பேரிடர் இல்லாத ஆண்டாக, தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் ஆண்டாகவும், பொருளாதாரம் உள்பட அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை தரும் ஆண்டாகவும் அமையவேண்டும். அதுவே கலைத்துறையை சேர்ந்தவர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஆகும்.

விளையாட்டு வீராங்கனை

காமென்வெல்த் வலு தூக்குதல் போட்டியில் 5 தங்கம் வென்று சாதனை படைத்த சென்னை விளையாட்டு வீராங்கனை டாக்டர் ஆர்த்தி:-

கொரோனா எனும் பேரிடர் இந்தியா உள்பட உலக நாடுகளையே அச்சுறுத்தியது. கொரோனா ஓய்ந்துள்ள நிலையில், படிப்படியாக அனைத்து துறைகளிலும் இந்தியா எழுச்சி பெற்று வருகிறது. குறிப்பாக விளையாட்டுத்துறை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டுத்துறையின் நிறைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி தரும் ஆண்டாக புத்தாண்டு அமையவேண்டும் என்பது என்னை போன்ற வீரர்-வீராங்கனைகளின், ஏன் நாட்டு மக்களின் விருப்பமாகவே இருக்கிறது. சவாலான சூழலிலும் செஸ் ஒலிம்பியாட்டை தமிழக அரசு சிறப்பாக நடத்திக் காட்டியது.

இதுபோலவே வரும் ஆண்டுகளிலும் உலகளாவிய விளையாட்டு நிகழ்ச்சிகள் தமிழகத்தில் நடைபெற வேண்டும். விளையாட்டு வீரர்கள் ஒருமித்த உணர்வுடன் விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்க்கவேண்டும். ஒட்டுமொத்த வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி. அதற்கு விளையாட்டு வீரர்களும் சூளுரை ஏற்கவேண்டும். அந்தவகையில் புத்தாண்டு புதுமையான, புத்துணர்ச்சிமிக்க ஆண்டாக அமையட்டும். விளையாட்டு வீரர்களின் கனவுகளையும், ஆசைகளையும் எட்டச்செய்யும் ஆண்டாக இருக்கட்டும்.

வேலைவாய்ப்புகள்

ராஜகுமார் (ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர், திண்டுக்கல்):- கொரோனா காலத்தில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டனர். ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டாலும் சக மாணவர்களுடன் சேர்ந்து பாடங்களை படிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்த முடியாமல் சிரமப்பட்டனர். எனவே புதிய ஆண்டு அனைவருக்கும் நல்ல ஆண்டாக பிறக்க வேண்டும். கொரோனா ஓய்ந்து மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரி கால அனுபவங்களை முழுமையாக பெற வேண்டும்.

சுமாசிவா (குடும்ப தலைவி, பூச்சிநாயக்கன்பட்டி):- கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை புத்தாண்டு வரப்போகிறது என்றால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக புத்தாண்டை வரவேற்க கூட மனமின்றி தவித்திருக்கிறோம். ஏனென்றால் அந்த அளவுக்கு ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. குடும்ப செலவுகளை கூட சமாளிக்க முடியாமல் பெண்கள் திணறினர். தற்போது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வாழ்வாதாரம் சற்று மேம்பட தொடங்கியுள்ளது. புதிய ஆண்டில் வேலை வாய்ப்புகள் பெருகி மக்கள் அனைவருக்கும் நிம்மதியான வாழ்க்கை அமைய வேண்டும் என்பதே பலரின் பிரார்த்தனையாக இருக்கிறது.

மக்களின் எதிர்பார்ப்பு

சையது அபுதாகீர் (மளிகை கடைக்காரர், கோசுகுறிச்சி):- கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்கள் போதிய வருமானம் இன்றி தவித்த னர். அதனால் அவர்களின் வாங்கும் சக்தியும் வெகுவாக குறைந்தது. இதன் காரணமாக எங்களை போன்ற அத்தியாவசிய பொருட்களை விற்பவர்கள் கூட பெரிதும் பாதிக்கப்பட்டோம். இந்த நிலையில் தற்போது பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். வரவிருக்கும் புதிய ஆண்டில் இதுபோன்று நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் வகையில் எந்த சம்பவங்களும் நடக்காமல் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.

விநாயகமூர்த்தி (தனியார் பஸ் நிறுவன மேலாளர், பழனி):- கொரோனா காலத்தில் பஸ்கள், வாடகை வாகனங்கள் என அனைத்து வகை வாகனங்களும் இயங்க தடை விதிக்கப்பட்டது. இந்த கட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் அதிக பணம் கொடுத்து, வாடகை வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை இருந்தது. பஸ்கள் இயக்கப்படாததால் அந்த தொழிலை நம்பி இருந்த ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். புதிய ஆண்டில் அதுபோன்ற பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் இருக்க வேண்டும். ஒருவேளை மீண்டும் கொரோனா பரவல் ஏற்பட்டாலும் கட்டுப்பாடுகளுடன் பஸ்களை இயக்க அரசு அனுமதிக்க வேண்டும்.

மிரட்டும் புதிய வகை கொரோனா விரைவில் ஓய்ந்து, மக்களுக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தரும் ஆண்டாக புத்தாண்டு அமையவேண்டும் என்பதே அனைவரது பிரார்த்தனையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.


Next Story