கால்நடைகளை தாக்கும் மாட்டம்மை நோயை கட்டுப்படுத்துவது எப்படி?
கால்நடைகளை தாக்கும் மாட்டம்மை நோயை கட்டுப்படுத்துவது குறித்து கால்நடைத்துறையினர் மூலம் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மாட்டம்மை நோய்
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை அதிகளவில் வளர்த்து வருகிறார்கள். இந்த நிலையில் கால்நடைகளுக்கு மாட்டம்மை நோய் பரவி வருகிறது. எனவே ஆரோக்கியமான மாடுகளில் இருந்து நோய்வாய்ப்பட்ட மாடுகளை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும். கொசுக்கள், ஈக்கள், உண்ணி போன்ற கடிக்கும் பூச்சிகள் மாட்டம்மை நச்சுயிரியை (வைரஸ்) பரப்பி வருகின்றன.
எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாட்டம்மை நச்சுயிரி பரப்பும் உண்ணி, கொசு போன்றவற்றை குறைப்பதற்கான நடவடிக்கையை விவசாயிகள் எடுக்க வேண்டும்.
கிருமி நாசினி தெளிக்க வேண்டும்
மாடுகளில் பூச்சி விரட்டிகளை பயன்படுத்த வேண்டும். தகுந்த உயிரி பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சரியான சுகாதார நடவடிக்கைகள் கண்டிப்பாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது மாட்டு கொட்டகைகளில், பண்ணையில் பொருத்தமான ரசாயனங்கள், கிருமி நாசினிகளை தெளிக்க வேண்டும். மாட்டம்மை நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் எந்த ஆவினங்களையும், நோயுற்ற, நோய் பாதிக்கப்படாத பகுதிகளில் அல்லது பண்ணைக்குள் அறிமுகப்படுத்தக்கூடாது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நோயுற்ற, நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஆவினங்களின் நடமாட்டத்தை கடுமையாக கட்டுப்படுத்துவதை உறுதிசெய்தல் வேண்டும். தங்கள் கால்நடைகள் கட்டும் இடங்களில் மாலை 6 மணியளவில் நொச்சி இலை சருகுகள், வேப்பிலை சருகுகளை கொண்டு புகைப்பிடித்தால் கால்நடைகளை தாக்கும் கொசுக்களை கட்டுப்படுத்த முடியும். கால்நடைகளுக்கு வேறு ஏதேனும் சுகவீனம் தென்பட்டால் சிகிச்சை அளிக்க உடனடியாக அருகே உள்ள கால்நடை மருத்துவமனை அல்லது கால்நடை மருந்தகத்தை அணுக வேண்டும். மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றி கால்நடைகளை மாட்டம்மை நோயிலிருந்து பாதுகாத்து கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.