பருத்தி செடிகளை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்துவது எப்படி?
பருத்தி செடிகளை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை துறை உதவி இயக்குனர் குமரன் விளக்கம் அளித்துள்ளார்.
திருச்சுழி,
பருத்தி செடிகளை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்மை துறை உதவி இயக்குனர் குமரன் விளக்கம் அளித்துள்ளார்.
பருத்தி சாகுபடி
இதுகுறித்து திருச்சுழி வேளாண்மை துறை உதவி இயக்குனர் குமரன் கூறியதாவது:-
திருச்சுழி பகுதிகளில் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மழைக்காலங்களில் வயல்களில் கரைகள் மற்றும் இதர பகுதிகளில் புற்கள், செடிகள் முளைத்து அதன் மூலம் உற்பத்தியாகும் தத்துப்பூச்சி, பச்சை காய்ப்புழு, அந்துப்பூச்சி, பச்சை கூண் வண்டு, இளஞ்சிவப்பு காய்புழு, புருட்டோனியா புழு ஆகியவை பருத்தியை சேதப்படுத்துகிறது. இந்த பூச்சிகள் பருத்தி செடியில் உள்ள பூ, பிஞ்சு, காய்கள் ஆகியவற்றை அதிக அளவில் தாக்கி சேதப்படுத்தும். எனவே விவசாயிகள் இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பூச்சி தாக்குதல்
இனகவர்ச்சி பொறி, வைரஸ் நுண்ணுயிர் மூலம் புழுக்களை கட்டுப்படுத்தலாம். அதேபோல வேளாண் துறையினரின் உரிய ஆலோசனைப்படி பூச்சி மருந்துகளை தெளித்து கவனித்து பராமரித்தால் பூச்சிகளை கட்டுப்படுத்த முடியும்.
கூண்வண்டு, வேர்புழுக்களால் பாதிக்கப்பட்ட பருத்தி செடிகளை உடனடியாக வேருடன் புடுங்கி அப்புறப்படுத்தி நோய் பாதிப்புகளை குறைக்கலாம். பருத்தி செடியிலுள்ள பூச்சிகளின் முட்டைகள், சிறிய அளவில் வளர்ந்த புழுக்கள், பாதிக்கப்பட்ட பூக்கள், காய்கள், செடிகளை கண்டுபிடித்து அப்புறப்படுத்தியும் நோய் தாக்குதலை குறைக்கலாம். மழைக்காலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி பராமரித்தால் பருத்தி செடியில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.