குமராட்சி வட்டாரத்தில் பயிர்களில் தாவர ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்துவது எப்படி?அதிகாரி விளக்கம்
குமராட்சி வட்டாரத்தில் பயிர்களில் தாவர ஒட்டுண்ணிகளை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
காட்டுமன்னார்கோவில்,
குமராட்சி அருகே பரிவிளாகம் ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இதற்கு குமராட்சி வேளாண்மை உதவி இயக்குனர் அமிர்தராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நெல்லுக்கு பின் பயறு சாகுபடி திட்டத்தினையும், மானிய விலையில் விதைகள் விற்பனை செய்வது குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.
விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் நடராஜன் கூறுகையில், குமராட்சி வட்டாரத்தில் கடந்த ஆண்டுகளில் கஸ்குட்டா களை ஒட்டுண்ணியானது பயறு வகை பயிர்களில் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இவை மஞ்சள், செம்மஞ்சள், சிவப்பு நிறங்களில் காணப்படும். இந்த வகை ஒட்டுண்ணி, பயிரிலிருந்து உணவையும், நீரையும் எடுத்துக் கொண்டு பயிர் வளர்ச்சியை குறைத்து பெருமளவில் மகசூல் இழப்பினை ஏற்படுத்துகிறது. இந்த களை ஒட்டுண்ணியை கோடை உழவு செய்வதன் மூலமும், பயிர் இல்லாத தருணங்களில் பாதிக்கப்பட்ட வயல்களில் கிளைபோசெட் களைக்கொல்லி மருந்தினை ஒரு லிட்டர் நீரில் 10-12 மில்லி லிட்டர் என்ற அளவில் கலந்து தெளிப்பதன் மூலமாகவும், களைக்கொல்லியான பெண்டிமெத்தலின் 30 ஈஸி களைக்கொல்லி மருந்தினை ஏக்கருக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து விதைப்பு செய்த 3-ம் நாளில் வயலில் ஈரம் இருக்கும் நிலையில் கைத்தொளிப்பான் கொண்டு தெளிப்பதன் மூலமாகவும், களை முளைத்த பின் களைக்கொல்லியான இமாசிதபைர் 10 எஸ்.எல் மருந்தினை ஏக்கருக்கு 250 மில்லி லிட்டர் என்ற அளவில் 200 லிட்டர் நீரில் கலந்து விதைத்த 15-20 நாட்களுக்குள் தெளிப்பதன் மூலமாகவும் கட்டுப்படுத்தலாம். பாதிக்கப்பட்ட வயல்களில் இந்த களை ஒட்டுண்ணி செடிகளை கையினால் அகற்றி அவற்றை எரித்து அழித்து விடலாம் என்றார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மரியம் ரூட் சூரியமூர்த்தி, விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.