கரும்பு பயிரில் வேர்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?


கரும்பு பயிரில் வேர்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?
x

கரும்பு பயிரில் வேர்ப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது பற்றி கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரத்து 100 ஹெக்டர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு பயிர் சாகுபடி செய்துள்ளனர். தற்போது வேளாண்மை உழவர் நலத்துறை அலுவலர்கள் ரிஷிவந்தியம் மற்றும் திருக்கோவிலூர் வட்டாரங்களில் கரும்பு வயல்களை ஆய்வு செய்ததில் பயிரில் வெள்ளைப்புழு அல்லது வேர்ப்புழு தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்புழு தாக்குதலை கட்டுப்படுத்திடும் பொருட்டு வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இப்புழுவின் தாக்குதல் அறிகுறிகளான இலைகள் மஞ்சள் நிறமடைந்து வாடி சருகு போன்று மாறிவிடும்.

புழுக்கள் கரும்பின் ஆதார வேர்களை தாக்கி உண்ணும். இதனால் குருத்து பகுதி முழுவதும் காய்ந்துவிடும். வேர் மற்றும் அடிக்குருத்து பகுதியில் பெருமளவில் சேதத்தை ஏற்படுத்தும். இப்புழுவின் தாய் வண்டுகள் வேப்பமரம் மற்றும் கருவேல மரங்களில் அதிகளவு தங்கி வாழும் தன்மை உடையது. எனவே புழு தாக்குதலை கட்டுப்படுத்த கோடை மழைக்கு பின்னர், வேப்பம், கருவேலம் மரங்களில் தங்கியுள்ள தாய் வண்டுகளை விவசாயிகள் சேகரித்து அழிக்க வேண்டும்.

ஈரப்பதம் பராமரிப்பு

வண்டுகளை கையால் சேகரித்து அழிக்கும் முறை சிறந்த முறையாகும். கரும்பு வயல்களில் ஈரப்பதத்தை தொடர்ந்து பராமரிப்பதன் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்கள் வெளியே வந்துவிடுவதால் அதனை சேகரித்து தீயிட்டு அழித்து தாக்குதலை கட்டுப்படுத்தலாம். ஒரு ஏக்கருக்கு 2 கிலோ மெட்டாரைசியம், 50 கிலோ அனிசோபிளே மக்கிய தொழு உரத்துடன் கலந்து தாக்கப்பட்ட பயிரின் வேர்பகுதியில் தூவி தண்ணீர் விடவேண்டும். மேலும் குளோர்பைரிபாஸ் 20 இ.சி. மருந்து 2 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் அல்லது இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல். மருந்து 1 மில்லியை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட கரும்பின் வேர்பகுதியில் நன்கு நனையும் படி ஊற்றி கட்டுப்படுத்தலாம். தாக்குதலுக்கு உட்பட்ட கரும்பு பயிரை சுற்றி 5 மீட்டர் சுற்றளவில் உள்ள கரும்பு பயிரிலும் இக்கரைசலை தெளித்து புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.


Next Story