மரவள்ளியில் செம்பேனை கட்டுப்படுத்துவது எப்படி?
நாமக்கல் தோட்டக்கலை உதவி இயக்குனர் கார்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் வட்டாரத்தில் தற்போது உள்ள பருவநிலை காரணமாக மரவள்ளி சாகுபடியில் செம்பேன் தாக்குதல் பரவி இருக்கிறது. பாதிக்கப்பட்ட செடிகளின் நிலைகளில் அடிப்பகுதியில் செம்பேன் காணப்படுவதோடு, இலைகள் பச்சையம் இழந்து காய்ந்துவிடும். பின்னர் இலைகள் உதிர்ந்து மகசூல் பாதிப்பு ஏற்படும்.
எனவே அதை தவிர்க்க பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம். குறிப்பாக மரவள்ளி சாகுபடியில் செம்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி ஓபரான் அல்லது 2 மில்லி புரோபர்கைட் அல்லது 4 கிராம் நனையும் கந்தகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மில்லி ஒட்டும் திரவத்துடன் சேர்த்து 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் வட்டார தோட்டக்கலை துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.