பயிர்களை பாதிக்கும் எலிகளை கட்டுப்படுத்துவது எப்படி


பயிர்களை பாதிக்கும் எலிகளை கட்டுப்படுத்துவது எப்படி
x

பயிர்களை பாதிக்கும் எலிகளை கட்டுப்படுத்துவது எப்படி? என்று வேளாண்மை விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளார்.

திருவாரூர்

நீடாமங்கலம்;

பயிர்களை பாதிக்கும் எலிகளை கட்டுப்படுத்துவது எப்படி? என்று வேளாண்மை விஞ்ஞானி விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- .

எலிகளின் பற்கள்

நெல் வயல்களில் 25 சதவீதம் மகசூல் பாதிப்பு மற்றும் சேமிப்பு கிடங்குகளில் 30 சதவீதம் பாதிப்பும் ஏற்படுகிறது. மேலும் எலிகளின் சிறுநீர், அதன் கழிவுகள், ரோமங்கள் மற்றும் துர்நாற்றம் மூலம் தானியங்கள் அசுத்தம் ஏற்பட்டு அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.எலிகளின் பற்கள் ஒரு மாதத்திற்கு 1.2 செ.மீட்டர் வரை வளரும். அந்த வளர்ச்சி தொடர்ந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் பற்கள் தாடையை கிழித்துஅதன் மூலம் ரத்தம் வெளியேறி எலிகள் இறந்துவிடும். அதனால்தான் எலிகள் தன்னுடைய பற்கள் மூலம் ஏதாவது ஒரு பொருளை கடித்துக் கொண்டே இருக்கும்.இதன் மூலம் பற்களின் வளர்ச்சி தடைப்படும்.

பறவை குடில்

நெற்பயிரில் அனைத்துப் பருவத்திலும் எலிகள் சேதத்தை ஏற்படுத்தும் தன்மை கொண்டது. குறிப்பாக இதன் தாக்குதல் அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்தில் மிக அதிகமாக காணப்படும். எலிகளை கட்டுப்படுத்த கோடைகாலத்தில் கிராமம் தோறும் எலி ஒழிப்பு முகாம்களை நடத்தி எலிகளை ஒழிக்கலாம்.எலிப் பொறிகளை வைத்து எலிகளை உயிருடனும் கொன்றும் கட்டுப்படுத்தலாம். ஆந்தைகள் அமருவதற்கு ஏதுவாக பறவை குடில் அமைத்து இவற்றை கட்டுப்படுத்தலாம். 5 கிராம் ப்ரோமோடயலான் ரசாயன பூச்சிக் கொல்லியை 5 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் கருவாடு கலந்து விஷ உணவாக எலி வலைகளுக்கு அருகே வைக்க வேண்டும்.

விஷ உணவு

மேலும் விஷ உணவாக ஒரு பகுதி துத்தநாக பாஸ்பைைட எலிகளை கவரும் உணவான அரிசி, பொரி, கருவாடு, கடலையுடன் சேர்த்து உருண்டையாகப் பிடித்து வயல்களில் வைக்க வேண்டும். ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக மூன்று அல்லது நான்கு நாட்கள் வெறும் உணவாக அல்லது விஷம் வைக்காத உணவை கலந்து வயலில் வைக்க வேண்டும். வீட்டு உபயோகத்துக்காக துத்தநாக பாஸ்பைடை கண்டிப்பாக உபயோகிக்க கூடாது.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Next Story