தென்னையை தாக்கும் வாடல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி?: வேளாண் அதிகாரி விளக்கம்


தென்னையை தாக்கும் வாடல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி?:  வேளாண் அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 10 Dec 2022 12:15 AM IST (Updated: 10 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்னையை தாக்கும் வாடல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி? என்று வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

திருச்செந்தூர் வட்டாரத்தில் தென்னையை தாக்கும் வாடல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி? என்று வட்டார வேளாண் உதவி இயக்குனர் வெங்கடசுப்பிரமணியன் விளக்கம் அளித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வாடல் நோய்

உடன்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டாரத்தில் பரவலாக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதி தென்னையில் தஞ்சாவூர் வாடல் நோய் தாக்கம் காணப்படுகிறது. இந்த நோயின் ஆரம்பநிலையில் வாடல், ஓலைகள் மஞ்சள் நிறமடைதல், வெளிச்சுற்று இலைகள் தொங்கி விடுதல் ஆகிய அறிகுறிகள் தெரியும். அதைத் தொடர்ந்து தண்டின் அடிபாகத்தின் வெடிப்புகள் வழியாக செஞ்சிவப்பு நிற சாறு கசிந்து மேல்நோக்கி பரவும். கசியும் பகுதியின் திசுக்கள் மென்மையாக இருக்கும். சாறு கசியும் பகுதியில் உள்ள திசுக்கள் அழுகி தண்டின் அடிப்பகுதியும் அழுகி விடும்.

மரப்பட்டை எளிதில் உடையக் கூடியதாக மாறி அடிக்கடி செதில்களாக உறிந்து திறந்த வெளி வெடிப்பு மற்றும் பிளவுகள் தோன்றும். மரத்தின் உட்பகுதி திசுக்கள் நிறமிழந்து சிதைந்து துர்நாற்றம் வீசும். தண்டின் அடிப்பகுதியில் அரைத்திட்டு காளான் வித்து தோன்றும். கடைசியில் மரம் மடிந்து விடும்.

நோயை கட்டுப்படுத்துவது எப்படி?

இந்நோயை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட மரங்களை அகற்றி அழித்து விடவேண்டும். மேலும், பசுந்தாள் உரங்களை வளர்த்து பூக்கும் பருவத்தில் தோப்பிலேயே அவற்றை உழுது விட வேண்டும். ஆரம்ப நிலையில் நோய் அறிகுறி தெரியும் மரத்தை சுற்றி 4அடி தள்ளி பள்ளம் தோண்டி மரத்தை தனிமைப்படுத்த வேண்டும். பேசிலஸ் சப்டிலிஸ் அல்லது சூடோமோனஸ் மரத்திற்கு 200 கிராம் வீதம், டிரைக்கோடொமா விரிடி 200 கிராம் உடன் சேர்த்து இடவேண்டும். 400கிராம் அசோபாஸை 50கிராம் தொழு உரத்துடன் கலந்து இடவேண்டும். தொழு உரம் 50கிலோ வேப்பம் புண்ணாக்கு 5கிலோ வீதம் 6மாதத்திற்கு ஒரு முறை இடலாம். ரியோபங்கின் 2கிராம், காப்பர் சல்பேட் 1கிராம், 100மில்லி தண்ணீரில் கலந்து அல்லது 1மில்லி ஹெக்சகோனசோல், 100மில்லி தண்ணீர் கலந்து வேர் மூலம் செலுத்தலாம்.

மேலும் விபரங்களுக்கு...

பென்சில் தடிமனுள்ள நன்கு உறிஞ்சும் தன்மையுள்ள வேரை தேர்வு செய்து சாய்வாக வெட்ட வேண்டும். மருந்தை பாலித்தீன் பையில் எடுத்து வேர் அதனுள் நனையும்படி வைக்க வேண்டும். மேலும் விவசாயிகள் விபரம் அறிய தங்கள் பகுதி வேளாண்மை துறை அலுவலர்களை அணுகி ஆலோசனைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story