கலப்பட தேயிலைத்தூளை கண்டறிவது எப்படி?
தேயிலை கண்காட்சியில் கலப்பட தேயிலைத்தூளை கண்டறிவது எப்படி? என்பது குறித்து சுற்றுலா பயணிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
குன்னூர்
தேயிலை கண்காட்சியில் கலப்பட தேயிலைத்தூளை கண்டறிவது எப்படி? என்பது குறித்து சுற்றுலா பயணிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
தேயிலை வாரியம்
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் கடந்த 6-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா தொடங்கியது. தொடர்ந்து வாசனை திரவிய பொருட்கள் கண்காட்சி, ரோஜா கண்காட்சி நடந்தது. மேலும் ஊட்டியில் மலர் கண்காட்சி நடந்து வருகிறது.
நீலகிரியில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை ெதாழிற்சாலைகளுக்கு வழங்குகிறார்கள். அங்கு தேயிலையை அரைத்து தேயிலைத்தூளாக உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்கிைடயே தேயிலைத்தூளில் கலப்படம் இருப்பதாக அடிக்கடி புகார் எழுந்து வருகிறது. இதனால் தேயிலைத்தூள் விலை குறைவதால், பச்சை தேயிலை விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு கலப்பட தேயிலைத்தூளை தடுக்கும் நடவடிக்கைகளை தேயிலை வாரியம் மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் உலக தேயிலை தினத்தையொட்டி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தேயிலை வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், தென்னிந்தியாவில் முதல் முறையாக தேயிலை கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கியது.
சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு
முதல் நாளில் குன்னூர் அருகே டைகர்ஹில் டேன்டீ தோட்டத்தில் 1,200 தோட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்ட மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது. மேலும் பூங்காவில் அமைக்கப்பட்ட 30 அரங்குகளில் நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் சில்வர் டீ, கிரீன் டீ, ஆர்த்தோடக்ஸ், ஒயிட் டீ உள்பட பல்வேறு வகையான தேயிலைத்தூள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
கண்காட்சியில் கடைசி நாளான நேற்று தேநீர் அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குறிப்பாக தரமற்ற தேயிலைத்தூள், கலப்பட தேயிலைத்தூள் மூலம் தயாரித்த தேநீர் அருந்துவதால் உடலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, கலப்பட தேயிலைத்தூள், நல்ல தேயிலைத்தூளை கண்டறிவது எப்படி? என்பது குறித்து தேயிலை வாரியம் மூலம் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் கண்காட்சியை பார்வையிட்ட சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.