கோழிப்பண்ணைகளில் தீவனம் விரயமாவதை தடுப்பது எப்படி?
கோழிப்பண்ணைகளில் தீவனம் விரயமாவதை தடுப்பது எப்படி? என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
மழைக்கு வாய்ப்பு இல்லை
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு முறையே 10, 12 மற்றும் 12 கி.மீ.வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சம் 40 சதவீதமாகவும், அதிகபட்சம் 60 சதவீதமாகவும் இருக்கும்.
தாவர எண்ணெய்
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில், காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக காணப்படுவதால், தீவனம் வீணடிக்கப்படாமல் பாதுகாத்து கொள்ளும் வியூகங்களில் பண்ணையாளர்கள் ஈடுபட வேண்டும். தீவன விரயத்தை தடுக்க தீவனத்தில் சிறிது அளவு தாவர எண்ணெய் சேர்க்கலாம். இதனால் மதிப்புள்ள வைட்டமின் போன்றவை காற்றில் பறந்து செல்வதை தடுக்க முடியும். மேலும் உயர்மனைகளில் பக்கவாட்டில் படுதாவை கட்ட வேண்டும்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் நாய்களில் பார்வோ வைரஸ் ரத்த கழிச்சல் நோய் காணப்படுகிறது. இந்த நோய் 6 வாரம் முதல் 6 மாதம் கொண்ட நாய்குட்டிகளை அதிகமாக தாக்குகிறது. இந்த நோயினை தடுப்பதற்கு முதல் நடவடிக்கையாக நாய் குட்டிகளை ஒன்றரை மாதத்திற்கு பிறகு தான் தாயிடம் இருந்து பிரிக்க வேண்டும். அவ்வாறு பிரிப்பதற்கு முன்பாகவே பார்வோ வைரஸ், எலிக்காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசியை போட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.