பிளாஸ்டிக்குகளுக்கு மாற்று பொருட்களை உற்பத்தி செய்வது எப்படி? சென்னையில் இன்று முதல் 2 நாட்கள் தேசிய கண்காட்சி
பிளாஸ்டிக்குகளுக்கு மாற்று பொருட்களை உற்பத்தி செய்வது எப்படி? என்பது தொடர்பான தேசிய கண்காட்சி சென்னையில் இன்று முதல் 2 நாட்கள் நடக்கிறது.
சென்னை,
ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்று பொருட்களை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்குவதற்கும், பல்வேறு மாற்று பொருட்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாறுபாடு அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோருடன் இணைந்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக, ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றான, சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களுக்கான தேசிய கண்காட்சி மற்றும் தொழில்முனைவோர் கருத்தரங்கம் செப்டம்பர் 26 (இன்று) மற்றும் 27-ந்தேதிகளில் (நாளை) சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடக்கிறது. இத்தகைய கண்காட்சி இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் நடத்தப்படுகிறது.
150 அரங்கங்கள் அமைப்பு
நாடு முழுவதிலும், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கான மாற்று பொருட்களாக வாழை இலை பொருட்கள், நார், அரிசி தவிடு, அரிசி மட்டை, விவசாய பொருட்கள், பாக்கு இலை பொருட்கள், தேங்காய் மட்டை பொருட்கள், தென்னை நார் பொருட்கள், மட்பாண்ட பொருட்கள், பனை பொருட்கள் துணி-சணல் பொரு ட்கள், போன்றவைகளை உற்பத்தி செய்யும் தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்புப் பொருட்களை காட்சிப்படுத்தும் 150 அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் எந்திரங்களையும் அவர்கள் காட்சிப்படுத்த உள்ளார்கள்.
அனுமதி இலவசம்
மேலும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் தொகுக்கப்பட்ட தமிழகத்தில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான சுற்றுச்சூழல் மாற்றுப் பொருட்களின் உற்பத்தியாளர்களின் கோப்பகம் இக்கண்காட்சியின்போது அறிமுகப்படுத்தப்படும்.
இந்த தேசிய கண்காட்சி பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளுக்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று பொருட்களை தயாரிக்க முற்படும் தொழில்முனைவோர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள், கல்யாண மண்டபங்கள், திரையரங்குகள் நடத்துபவர்கள் மற்றும் வணிகங்களில் ஈடுபடும் நபர்கள் உட்பட அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், இதில் கலந்துகொள்ள அனைவருக்கும் அனுமதி இலவசம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.