சிறுதானியங்களில் தரமான விதை உற்பத்தி செய்வது எப்படி?:வேளாண்மை அதிகாரிகள் விளக்கம்
தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் சிறுதானியங்களில் தரமான விதை உற்பத்தி செய்வது எப்படி? என்று வேளாண்மை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுதானியங்களில் விவசாயிகல் தரமான விதை உற்பத்தி செய்வது எப்படி? என்று வேளாண்மை அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
சிறுதானியங்கள்
சிறுதானியங்களின் நன்மைகளைப் பற்றி மக்களுக்கு விழுப்புணர்வு ஏற்படுத்த, ஐக்கிய நாடுகள் சபையானது இந்த ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்து உள்ளது. சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, வரகு, பனிவரகு, குதிரைவாலி ஆகியவை சிறுதானிய பயிர்கள் ஆகும். உலக சிறுதானிய உற்பத்தியில் முன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உற்பத்தியாகிறது. இந்தியாவில் ராஜஸ்தானுக்கு அடுத்த படியாக தமிழ்நாட்டில் அதிகமாக சிறுதானியங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த பயிர்கள் பயிர் சுழற்சி முறைக்கு உகந்ததாகவும் வறட்சி, களர், உவர் மற்றும் வளமற்ற நிலப்பகுதிகளில் சாகுபடி செய்ய ஏற்றதாகவும் உள்ளது.
சிறுதானியங்களில் மிகுதியான தாதுப்பொருட்கள், உயிர்சத்துக்கள். நார்சத்துக்கள் மற்றும் குறைந்த அளவு கொழுப்புச்சத்துக்கள் அடங்கி இருக்கிறது. மற்ற தானியங்களை காட்டிலும், சிறுதானியங்களில் கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. சிறுதானியங்கள் பூச்சி நோய்களை தாங்கி வளரும் தன்மை கொண்டதால், பூச்சி மருந்து பயன்பாடும் குறைவு ஆகும். எனவே இவை சிறந்த ஆரோக்கியத்துக்கான உணவாக கருதப்பதுகிறது. உணவே மருந்து என்ற முன்னோர்களின் கூற்றுக்கு இணங்க, உடல் நலத்துக்கு நன்மை தரும் சிறுதானியங்களின் நுகர்வையும் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும். சிறுதானிய பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க தரமான விதைகளை பயன்படுத்துவது அவசியம்.
தரமான விதை
எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுதானியத்தில் தரமான விதையை உற்பத்தி செய்வதற்கு விவசாயிகள் தொழில்நுட்பங்களை பின்பற்ற வேண்டும். அதன்படி உயர் விளைச்சல் தரும் ரகங்களை தேர்வு செய்ய வேண்டும், ஒவ்வொரு பயிர் ரகங்களுக்கும் ஏற்ற சாகுபடி பருவத்தை கணடறிந்து சாகுபடி செய்ய வேண்டும், தேவையான அளவு வல்லுநர் மற்றும் ஆதார விதைகளை பயண்படுத்த வேண்டும், விதை உற்பத்திக்கு ஏற்ற சாகுபடி தொழில்நுட்பங்களை திறம்பட பயன்படுத்த வேண்டும், ரகத்தின் மரபுத்தூய்மையை பராமரிக்க போதுமான பயிர் விலகல் தூரத்தை கடைப்பிடிக்க வேண்டும், ஒவ்வொரு ரகத்தின் மரபுத்தூய்மையை உறுதிப்படுத்த அவ்வப்போது கலவன் அகற்ற வேண்டும். நிலம் தேர்வு, விதைக்கும் பருவம், பயிரின் வளர்ச்சி, பூக்கும் பருவம் மற்றும் அறுவடைக்கு முந்தைய நிலைகளில் பயிர்களை கண்காணித்தல். சிறுதானிய பயிர்களின் விதைகள் சிறிய அளவில் இருப்பதால் கல் மண் மற்றும் தூசிகளை கவனமாக அகற்றுதல், சுத்தம் செய்த விதைகளை விதை நேர்த்தி செய்து முறையாக சேமித்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.
முளைப்பு திறன்
சிறுதானிய பயிர்களான சோளம், கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி போனறவற்றிற்கு 75 சதவீத விதை முளைப்புத்திறன் இருக்க வேண்டும். மேலும் விவசாயிகள் தங்கள் கைவசம் உள்ள விதைகளை விதைக்கும் போது அந்த விதைகள் சரியான முளைப்புத்திறன் உடையவைதானா என பரிசோதித்து விதைக்க வேண்டும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் தங்களிடம் உள்ள விதைகளை தூத்துக்குடி எட்டயபுரம் ரோடு, ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் செயல்படும் விதைப்பரிசோதனை நிலையத்தில் உரிய கட்டணத்துடன் விதைகளை பரிசோதித்துக் கொள்ளலாம்.
இந்த தகவலை நெல்லை விதைப்பரிசோதனை அலுவலர் ஆனந்தி ராதிகா மற்றும் தூத்துக்குடி விதைப்பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் சேக் நூஹ் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.