குடிநீர் ஊற்று பகுதியில் மனித கழிவுகள் கலப்பு; துப்புரவு தொழிலாளர்கள் 2 பேர் கைது
ஊட்டி அருகே குடிநீர் ஊற்று பகுதியில் மனித கழிவுகள் கலந்த விவகாரத்தில், துப்புரவு தொழிலாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஊட்டி,
ஊட்டி அருகே குடிநீர் ஊற்று பகுதியில் மனித கழிவுகள் கலந்த விவகாரத்தில், துப்புரவு தொழிலாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மக்களுக்கு வயிற்றுப்போக்கு
நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குழி ஆடா பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கிராமம் அருகே மலைப்பகுதியில் இருந்து ஊற்று தண்ணீர் குடிநீராக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஊற்று உருவாகும் இடத்தில் இருந்து தண்ணீரை கொண்டு வர குடிநீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்து பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
இந்தநிலையில் நரிக்குழி ஆடா மக்கள் பலருக்கு கடந்த 3 நாட்களாக வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து நஞ்சநாடு ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் ஊராட்சி தலைவர் சசிகலா மற்றும் அதிகாரிகள் கிராமத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது குடிநீரில் மனித கழிவுகள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மனித கழிவுகள் கலந்தது
இதனால் அதிர்ச்சி அடைந்த ஊராட்சி தலைவர் இதுகுறித்து ஊட்டி ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு யசோதா உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் தர்மராஜ், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். ஊட்டி எல்லநள்ளி பகுதியில் 2 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
இதில் தஞ்சாவூர் மாவட்டம் காமராஜர் நகரை சேர்ந்தவர்கள் ரஞ்சித் (வயது 29), சக்திவேல் (24). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஊட்டி அடுத்த எல்லநள்ளி பகுதிக்கு வந்து குடும்பத்துடன் தங்கி, செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்றும் தனியார் நிறுவனத்தில் துப்புரவு தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 29-ந் தேதி ரஞ்சித், சக்திவேல் 2 பேரும் குந்தா பிக்கட்டியில் உள்ள ஒரு வீட்டில் செப்டிக் டேங்கில் இருந்து மனித கழிவுகளை அகற்றி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு வந்தனர்.
2 பேர் கைது
அவர்கள் வழக்கமாக அதிகரட்டியில் உள்ள தனியார் உர மையத்திற்கு மனித கழிவுகளை கொடுப்பார்கள். அதற்கு கட்டணமாக ரூ.1,000 கொடுக்க வேண்டும். அவர்கள் பணம் கொடுப்பதை தவிர்ப்பதற்காக, ஆள் நடமாட்டம் இல்லாத இத்தலார் சாலையில் உள்ள நரிக்குழி ஆடா என்ற இடத்தில் மனித கழிவுகளை கொட்டியது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் மழை பெய்ததால் மனித கழிவுகள் ஊற்று தண்ணீரில் கலந்து விட்டது. பின்னர் மக்கள் அந்த தண்ணீரை குடித்ததால் உடல் உபாதை ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பொது நீர்தேக்கத்தை மாசுபடுத்துதல், நோய் தொற்றை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ரஞ்சித், சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.