திராவிட மாடல் ஆட்சி உள்ளவரை மனித நேயத்தை அழிக்க முடியாது


திராவிட மாடல் ஆட்சி உள்ளவரை மனித நேயத்தை அழிக்க முடியாது
x

திராவிட மாடல் ஆட்சி உள்ளவரை மனித நேயத்தை அழிக்க முடியாது என்று அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.

ராணிப்பேட்டை

பாராட்டு சான்றிதழ்

ராணிப்பேட்டை காரை அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மனித நேய வார நிறைவு விழாவில் கவிதை, கட்டுரை, பேச்சு மற்றும் ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற 100 மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அனைவரும் சமம்

தீண்டாமையை ஒழிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் மனிதநேய வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொருவர் வீட்டிலும், நாட்டிலும் மனிதநேயத்தோடு செயல்பட்டால் நாட்டில் அமைதி நிலவும். முன்னாள் முதல்-அமைச்சர்களான அண்ணா, கலைஞர் ஆகியோர்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மனிதநேயத்தோடு ஆட்சி நடத்தி வருகின்றார்.

திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து தரப்பினரும் ஒன்றே என்ற சமத்துவத்தை குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி செய்து வருகின்றார். தமிழ்நாட்டில் காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கம் அனைவரும் சமம் என்பதை குறிப்பதற்காகத்தான்.

அழிக்க முடியாது

கல்வி தான் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து கலைஞர் வழியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அதிக அளவிலான நிதியினை ஒதுக்கி வருகின்றார். அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் மருத்துவம் படிக்க தேவையான அனைத்து செலவுகளை அரசே வழங்கி வருகின்றது. இதுபோன்ற பல்வேறு துறைகளில் மகத்தான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். திராவிட மாடல் ஆட்சி உள்ளவரை மனிதநேயத்தை யாராலும் அழிக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மணிமேகலை, நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், துணைத் தலைவர் ரமேஷ்கர்ணா, நகர மன்ற உறுப்பினர்கள் மாணிக்கம்மாள், வினோத், தாட்கோ மாவட்ட மேலாளர் சண்முக சுந்தரம், முன்னோடி வங்கி மேலாளர் ஆலியம்மா ஆபிரஹாம், விழிக்கண் குழு உறுப்பினர் ஜெயகுமார், நலக்கண் குழு உறுப்பினர் ககவுதம். தனி தாசில்தார் செல்வி. பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செழியன். பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சித்ரா, தலைமையாசிரியர் கணபதி மற்றும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story