நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் வயல்கள் நீரில் மூழ்கியது


நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் வயல்கள் நீரில் மூழ்கியது
x

நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் வயல்கள் நீரில் மூழ்கியது

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை பகுதியில் தொடரும் மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெல் வயல்கள் நீரில் மூழ்கியுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தொடர் மழை

அய்யம்பேட்டை பகுதியில் சில நாட்களுக்கு முன்பாக வெயில் சுட்டெரித்து வந்தது. அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயிலின் தாக்கம் இன்று (வியாழக்கிழமை) தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்குமோ என்ற கவலை அடைந்தனர். கத்தரி வெயிலின் தாக்கத்தை குறைக்கும் விதமாக அய்யம்பேட்டை பகுதியில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நெல் வயல்கள் நீரில் மூழ்கின

இந்த தொடர் மழையால் அய்யம்பேட்டை பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் நீரில் மூழ்கின. அய்யம்பேட்டை அருகே சூலமங்கலம், புண்ணியநல்லூர், வையச்சேரி உள்ளிட்ட கிராமங்களில் முன்பட்ட குறுவை சாகுபடியாக தெளிப்பு நெல் விதைக்கப்பட்டுள்ளது. இந்த நெல் வயல்கள் மழை தண்ணீரில் மூழ்கின. மழை தொடர்ந்தால் பெரும் இழப்பு ஏற்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

நாற்றுகள் மூழ்கி அழுகும் அவலம்

பாபநாசம் தாலுகா திருக்கருகாவூர் மற்றும் தேவராயன்பேட்டை, ரெங்கநாதபுரம், அகரமாங்குடி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. கோடை பருவத்தில் தெளிப்புவிதை மற்றும் எந்திரம் மூலம் நடவு செய்திருந்த பல நூறு ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்யப்பட்டிருந்த பயிர்கள் தொடர்மழையால் வயல்களில் மழைநீர் தேங்கி நாற்றுகள் முற்றிலும் அழுகி வீணாகி வருகிறது. இதனால் கோடை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வயல்களில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வடிய வைக்க முடியவில்லை. தண்ணீரை வடிய வைத்தால் தான் பயிர்களை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை பகுதியில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 4.45 மணி முதல் 6 மணி வரை பலத்த மழை பெய்தது. இந்த தொடர் மழை கோடை சாகுபடிக்கு ஏற்றது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பாபநாசம்

பாபநாசம், கபிஸ்தலம், ராஜகிரி, அய்யம்பேட்டை, வழுத்தூர் உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை திடீரென இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.

1 மணி நேரத்திற்கு மேலாக பெய்த இந்த மழையால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story