வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள்தண்டிக்கப்படுவார்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் வன விலங்குகளை வேட்டையாடுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
முயல் வேட்டை திருவிழா
பெரம்பலூர் மாவட்டத்தில் சித்திரை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் பாரம்பரியமான முயல் வேட்டை திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் மாவட்டத்தில் 39 கிராமங்களில் முயல் வேட்டை திருவிழா நடைபெற்றது. மீதமுள்ள கிராமங்களில் இனி வரும் 3 ஞாயிற்றுக்கிழமைகளில் ஏதாவது ஒரு ஞாயிற்றுக்கிழமை முயல் வேட்டை திருவிழா நடத்த திட்டமிடப்படப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ன் படி வன விலங்குகளான முயல், மான், காட்டு பன்றி, உடும்பு, மயில் ஆகியவற்றை தனியாகவோ அல்லது குழுவாகவோ வேட்டையாடுவது, பொரி வைத்து பிடிப்பது வன குற்றமாகும்.
குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீதும்...
மேற்கண்ட குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீதும், அதற்கு உடந்தையாய் இருப்பவர்கள் மீதும் மற்றும் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்பவர் மீதும் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ல் உள்ள பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தண்டிக்கப்படுவார்கள், என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் சித்திரை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் முயல் வேட்டை திருவிழா என்ற பெயரில் வன விலங்குகளான முயல்கள் வேட்டையாடுவதை வனத்துறை கண்டிக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் பெரம்பலூர் வன சரகத்தின் மூலம் மொத்தம் 10 வன குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் 2 குற்றங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
விழிப்புணர்வு
8 குற்ற வழக்குகளுக்கு இணக்க கட்டணம் வசூலிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வன விலங்குகளை வேட்டையாடுவது குற்றம் என்றும், முயல் வேட்டை திருவிழா நடத்தக்கூடாது என்றும் கிராம ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும், ஊர் முக்கியஸ்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வனத்துறையினர் வழங்கியும், வாகனங்களில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.