மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
நாகர்கோவிலில் உறவுக்கார பெண்ணுடனான தொடர்பு பற்றி தட்டிக் கேட்டதால் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உறவுக்கார பெண்ணுடனான தொடர்பு பற்றி தட்டிக் கேட்டதால் மனைவியை அரிவாளால் வெட்டிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
உறவுக்கார பெண்ணுடன்...
நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள கட்டையன்விளையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 42). இவருடைய மனைவி ஏஞ்சல் தயா (34). வெளியூரில் தங்கியபடி செல்வராஜ் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். பின்னர் சொந்த ஊருக்கு திரும்பிய அவர் மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.
இந்தநிலையில் செல்வராஜ், உறவுக்கார பெண் ஒருவருடன் செல்போனில் பேசி வந்துள்ளார். மேலும் அவருடன் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்ததாகவும் தெரிகிறது. இதனை அறிந்த மனைவி ஏஞ்சல் தயா, கணவர் செல்வராஜை கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மனைவிக்கு அரிவாள் வெட்டு
இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் இருந்த செல்வராஜிடம், அந்த பெண்ணிடம் இனி பேசக்கூடாது என ஏஞ்சல் தயா மீண்டும் வலியுறுத்தினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வராஜ், நீ என்னிடம் எதுவும் கேட்கக் கூடாது. நான் எங்கு வேண்டுமானாலும் செல்வேன். அதனை நீ வேவு பார்க்கிறாயா? எனக்கூறினார். மேலும் சமையலறையில் இருந்த அரிவாளை எடுத்து ஏஞ்சல் தயாவை சரமாரியாக வெட்டினார்.
இதில் தலை மற்றும் கை உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு வெட்டு விழுந்தது. இதனால் அவர் அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
தொழிலாளி கைது
இதுகுறித்து ஏஞ்சல் தயா வடசேரி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் செல்வராஜ் மீது கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை போலீசார் கைது செய்தனர்.
மனைவியை அரிவாளால் வெட்டியதாக தொழிலாளி கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.