கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை:சீர்வரிசை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் கைது
கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை செய்த சம்பவத்தில் சீர்வரிசை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் கைது செய்யப்பட்டாா்.
செஞ்சி,
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள மேல்எடையாளம் கிராமம் கடக்கால் தோப்பு பகுதியை சேர்ந்தவர் லாலு பாஷா மகள் பிர்தோஸ் (வயது 22). இவருக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரை அடுத்த ஆவூரை சேர்ந்த அன்வர் பாஷா மகன் அப்துல்லா (25) என்பவருக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், இவர்களுக்கு கடந்த 50 நாட்களுக்கு முன்பு ஹயானா என்கிற பெண் குழந்தை பிறந்தது. கைக்குழந்தையுடன், கடக்கால் தோப்பில் உள்ள தாய் வீட்டில் இருந்த பிர்தோஸ், நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள கிணற்றில் தனது குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். விசாரணையில், பிறந்த குழந்தைக்கு சீர்வரிசை செய்யாததால் அப்துல்லா மனைவியிடம் சீர்வரிசை கேட்டு துன்புறுத்தியதும், அதன் பிறகு தான் அவர் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து அப்துல்லாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.