மனைவியை கொலை செய்து கிணற்றில் வீசிய வழக்கில் கணவன் கைது


ரத்தினகிரி அருகே மனைவியை கொலைசெய்து கிணற்றில் வீசிய வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டார். போனில் நீண்டநேரம் பேசியதால் கொன்றதாக தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ரத்தினகிரி அருகே மனைவியை கொலைசெய்து கிணற்றில் வீசிய வழக்கில் அவரது கணவர் கைது செய்யப்பட்டார். போனில் நீண்டநேரம் பேசியதால் கொன்றதாக தெரிவித்துள்ளார்.

காணவில்லை என புகார்

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த பூட்டுத்தாக்கு பகுதியை சேர்ந்தவர் ராமு (வயது 40). இவரது மனைவி சரிதா (27). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. இருவரும் பெருமுகையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். ராமு தனது மனைவி சரிதாவை கடந்த மாதம் 25-ந்தேதி முதல் காணவில்லை என ரத்தினகிரி போலீசில் 1-ந்தேதி புகார் அளித்தார்.

அதன்பேரில் ரத்தினகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன சரிதாவை தேடி வந்தனர். ராமு போலீசில் புகார் தெரிவித்துவிட்டு தனது சொந்த ஊரான கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். பகுதிக்கு சென்றுவிட்டார்.

போனில் நீண்ட நேரம் பேசினார்

இந்த நிலையில் நேற்று முன்தினம் பூட்டுத்தாக்கில் ராமு வசித்து வந்த வீட்டில் உள்ள கிணற்றில் சரிதா கொலை செய்யப்பட்டு, துணியில் மூட்டையாக கட்டி வீசப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து சரிதாவின் கணவர் ராமுவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் சரிதாவின் நடத்தையில் ராமுவிற்கு சந்தேகம் இருந்து வந்ததாகவும், கடந்த மாதம் 24-ந்தேதி இரவு ராமு வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்த போது சரிதா நீண்ட நேரமாக போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். இதனை ராமு தட்டிக் கேட்டுள்ளார். அதற்கு சரிதா உனக்கு தெரிந்தவரிடம் தான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார். பின்னர் இருவரும் தூங்க சென்றுள்ளனர்.

தலையணையால் அழுத்தி கொலை

சரிதா தூங்கிய பின் அவரது கணவர் ராமு தலையணையால் சரிதாவின் முகத்தில் வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார். பின்னர் கை, கால்களை கட்டி ஒரு துணியால் மூட்டை கட்டி வீட்டில் இருந்த கிணற்றில் வீசியது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து ராமுவை போலீசார் கைது செய்தனர்.


Next Story