பெண் கொலையில் கணவர் கைது
மானூர் அருகே பெண் கொலையில் கணவரை போலீசார் கைது செய்தனர்.
மானூர்:
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்கு வாகைகுளத்தைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 39). இவருடைய மனைவி ராமலட்சுமி (35). இவர்கள் திருப்பூரில் குடும்பத்துடன் தங்கி இருந்தனர். அங்கு கல்யாணசுந்தரம் கார் மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். ராமலட்சுமி கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில் ராமலட்சுமியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து கல்யாணசுந்தரம் அடிக்கடி தகராறு செய்தார். இதனால் ராமலட்சுமி தனது குழந்தைகளுடன் திருப்பூரில் இருந்து புறப்பட்டு தந்தை வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.
இ்ந்தநிலையில் திருப்பூரில் இருந்து தெற்கு வாகைகுளத்துக்கு கல்யாணசுந்தரம் வந்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் ராமலட்சுமியை, கல்யாணசுந்தரம் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி்ச் சென்றார். இதில் ராமலட்சுமி இறந்தார். இதுதொடர்பாக மானூர் போலீசார் தனிப்படை அமைத்து கல்யாணசுந்தரத்தை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.