ஆசிரியையை கத்தியால் குத்திய கணவர் கைது


ஆசிரியையை கத்தியால் குத்திய கணவர் கைது
x

ராசிபுரம் அருகே ஆசிரியையை கத்தியால் குத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்

ராசிபுரம்

ஆசிரியர்

நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் அருகே உள்ள கருமாக்கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 38), பட்டதாரி. இவருடைய மனைவி காயத்ரி (33). இவர் ராசிபுரம் டவுன் சேந்தமங்கலம் பிரிவு ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு சஸ்மிதா (8), வைஸ்னவ் (3) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் தனித்தனியே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியை காயத்ரி குழந்தைகளுடன் சேலம் தாதகாப்பட்டியில் உள்ள அவரது தந்தை ராஜேந்திரன் வீட்டில் வசித்து வருகிறார்.

இங்கிருந்து அவரும், அவரது குழந்தைகளும் பள்ளிக்கு வந்து சென்று கொண்டிருந்தனர். இதற்கிடையில் ராஜாவும் அவரது மாமனார் வீட்டுக்குச் சென்று மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து வந்துள்ளார்.

கத்திக்குத்து

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு சென்ற ராஜா, அவரது மனைவி காயத்ரி மற்றும் குழந்தைகளை கருமாக்கவுண்டம்பாளையத்தில் உள்ள தனது வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் போகலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். அப்போது கணவன்-மனைவி இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டகளூர்கேட் சக்தி நகர் அருகே சென்றனர். அப்போது திடீரென்று மோட்டார் சைக்கிளை நிறுத்திய ராஜா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி காயத்ரியை குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதில் காயத்ரிக்கு 6 இடங்களில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த ஆசிரியை காயத்ரி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

கைது

இதுபற்றி ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜாவை தேடி வந்தனர். நேற்று குருக்கபுரம் பஸ் நிறுத்தம் அருகே ராசிபுரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ராஜாவை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள், கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து ராஜா மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசாரால் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story