லாரி மீது கார் மோதியதில் கணவர் பலி: மனைவி-குழந்தை காயம்
மலையம்பாளையம் பிரிவு சாலை அருகே லாரி மீது கார் மோதியதில் கணவர் பலியானார். இவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் காயம் அடைந்தனர்.
லாரி மீது கார் மோதல்
கரூர் மாவட்டம், தளவாபாளையம் அருகே அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 45). இவரது மனைவி ரேணுகாதேவி (40) இவர்களது குழந்தை ஹர்ஷிவ் (3). இவர்கள் 3 பேரும் தங்களுக்கு சொந்தமான காரில் கரூர் ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வருவதற்காக கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தனர். பொன்னுசாமி காரை ஓட்டி வந்தார். அந்த கார் மலையம்பாளையம் பிரிவு அருகே வந்தபோது நிலை தடுமாறி தேசிய நெடுஞ்சாலையின் தடுப்பு சுவற்றின் மீது ஏறி சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலை பகுதிக்கு சென்றது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்து கொண்டிருந்த லாரி மீது கார் மோதியது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
கணவர் பலி-மனைவி காயம்
இதில் காரின் இடிபாடுகளில் சிக்கி பொன்னுசாமி, ரேணுகாதேவி, ஹர்ஷிவ் ஆகியோரும் காயம் அடைந்தனர். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பொன்னுசாமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
ரேணுகா தேவி லேசான காயம் அடைந்து இருந்ததால் முதலுதவி சிகிச்சை பெற்றார். குழந்தை ஹர்ஷிவ் பலத்த காயம் அடைந்து இருந்ததால் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ரேணுகாதேவி கொடுத்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கராஜ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.