பெண்ணை கொன்ற கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை


பெண்ணை கொன்ற கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
x

பெண்ணை கொன்ற கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

புதுக்கோட்டை

கொலை வழக்கு

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகே மணவாளன் குடியிருப்பை சேர்ந்த புஷ்பம் மகள் சுகன்யா (வயது 32). இவருக்கும் அதே ஊரை சேர்ந்த பாஸ்கர் (40) என்பவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் பாஸ்கருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பாஸ்கர் மண்எண்ணெயை சுகன்யா மீது ஊற்றி தீ வைத்து கொளுத்தினார்.

இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு சுகன்யா பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கீரமங்கலம் போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து பாஸ்கரை கைது செய்தனர்.

10 ஆண்டுகள் சிறை தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி நாராயணன் இன்று தீர்ப்பு கூறினார். இதில் இந்திய தண்டனை சட்டம் 302 பிரிவை 304 (2) ஆக மாற்றம் செய்து பாஸ்கருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் மற்றும் 5 ஆண்டுகள் தண்டனை என மொத்தம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்ட பாஸ்கரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.


Next Story